திமுக - காங்கிரஸ் உறவில் விரிசலா.? பாஜக வளர்ச்சியை கண்டு பீதியா.? திருமாவளவனை போட்டுத்தாக்கும் பாஜக!

By Asianet TamilFirst Published Dec 26, 2021, 9:03 AM IST
Highlights

பாஜக வளர்வதை தடுக்க, ஒன்றரை லட்சம் 'தமிழர்களை' கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சியின்  கூட்டணியே முக்கியம், அதாவது தமிழினத்தை விட 'அரசியல் அதிகாரம் மற்றும் ஆதிக்கமே' முக்கியம் என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உள்ளார்.

திருமாவளவனுக்கு பாஜகவின் வளர்ச்சியை கண்டு அச்சம் அதிகமாகியுள்ளது என்று திருமாவளவனுக்கு தமிழக பாஜக பதிலடி கொடுத்திருக்கிறது.

சென்னையில் விசிக சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “சனாதன சதிக் கூட்டத்திடமிருந்து தமிழ் நாட்டை நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். இதேபோல 2024- இல் இந்தியாவைக் காப்பாற்றுவதற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் முன் முயற்சியை எடுக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் அதன் பிறகு இந்தியாவின் நிலை என்னவாகும்? இதை நினைக்கும்போதே எனக்கு அச்சமாக உள்ளது. அப்படி ஒரு நிலை வராமல் தடுப்பதற்கான ஆற்றல் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலினுக்குத்தான் இருக்கிறது. 

பாஜகவுக்கு எதிராக அகில இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். சிலர் (மம்தா பானர்ஜி) காங்கிரஸ் அல்லாத அணி ஒன்றை அமைக்க வேண்டும் என்று முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்.  அதுபோன்ற திட்டங்களுக்கு திமுக உடன் பட்டுவிடக் கூடாது. காங்கிரஸ் அல்லாத ஓர் அணி என்பதே பாஜகவுக்கு உதவுவதற்கான ஒரு திட்டம் தான்” என்று திருமாவளவன் பேசினார். திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதில் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தொல்.திருமாவளவனின் இந்த பேச்சிலிருந்து  மூன்று விஷயங்கள் தெளிவாகிறது. காங்கிரஸ் - திமுக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. திருமாவளவனுக்கு பாஜகவின் வளர்ச்சியை கண்டு அச்சம் அதிகமாகியுள்ளது. பாஜக வளர்வதை தடுக்க, ஒன்றரை லட்சம் 'தமிழர்களை' கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சியின்  கூட்டணியே முக்கியம், அதாவது தமிழினத்தை விட 'அரசியல் அதிகாரம் மற்றும் ஆதிக்கமே' முக்கியம் என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உள்ளார். தமிழா! தமிழா! இதுவல்லவோ தமிழின துரோகம்?” என்று நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.

click me!