காங்கிரஸுக்கு செக் வைக்கும் திமுக... உள்ளாட்சித் தேர்தலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

By Asianet TamilFirst Published Jun 25, 2019, 8:06 AM IST
Highlights

தற்போதைய கூட்டணி உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், கூடுதல் இடங்களைக் கேட்டு குடைச்சல் கொடுப்பதைத் தவிர்க்கும் வகையில் திமுக சில காய்களை நகர்த்திவருவதாக தெரிகிறது. 

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடலாம் என்று காங்கிரஸ் நினைத்த வேளையில், அதற்கு செக் வைக்கும் விதமாக காங்கிரஸ் எதிர்ப்பு பேச்சை திமுகவினர் மேற்கொள்ள கட்சி மேலிடம் பச்சைக் கொடி காட்டிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


‘காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் எத்தனை நாளுக்கு பல்லக்குத் தூக்குவது’ என திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசியது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதில் அளித்த தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கராத்தே தியாகராஜன், “உங்களை யார் பல்லக்குத் தூக்கச் சொன்னது” என்று கேள்வி எழுப்பி, கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக நடந்துகொண்ட விதத்தைச் சுட்டிகாட்டி பேசியது மேலும் சலசலப்பை கூட்டிவிட்டது.


நேருவின் பேச்சுக்கு திமுகவினர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதற்கிடையே தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, “நேருவின் பேச்சில் எனக்கும் உடன்பாடு உண்டு. காங்கிரஸ் கட்சி பலமறிந்து இடங்களை கேட்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். தற்போது உள்ளாட்சித் தேர்தலை வைத்துதான் திமுக - காங்கிரஸ் கட்சிக்குள் இந்தப் பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  
 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் பெற்றி பெற்றது. இன்னும் இரு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது. அதிகபட்சமாக 25 சதவீத இடங்களைக் கேட்கவும் அக்கட்சி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதுபற்றி காங்கிரஸார் பேசப்போகவே, அதற்கு கே.என். நேரு பதில் அளிக்கும்விதமாகப் பேசினார்.


கே.என்.நேரு பேசியதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டிக்கவும் இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கைவிட்ட பிறகும் அதைப் பற்றி திமுக அலட்டிக்கொள்ளவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 5 முதல் 7 சதவீத இடங்களை மட்டுமே திமுக வழங்கும் என்றும், ஒரு மேயர் பதவியும் வழங்காது என்றும் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே திமுக முன்னணியினர் காங்கிரஸ் பற்றி பேசுவதை அக்கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

 
தற்போதைய கூட்டணி உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், கூடுதல் இடங்களைக் கேட்டு குடைச்சல் கொடுப்பதைத் தவிர்க்கும் வகையில் திமுக சில காய்களை நகர்த்திவருவதாக தெரிகிறது. அதன் காரணமாகவே இப்போது நடந்துவரும் பஞ்சாயத்து என்கிறார்கள் அக்கட்சியினர். இதற்கிடையே 'உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என மு.க. ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!