மோடி ஒரு நல்ல வியாபாரி.. அந்தத் திறமை எங்களுக்கு இல்லை... மோடியை வைத்துக்கொண்டு மாஸ் காட்டிய காங்கிரஸ்..!

By Asianet TamilFirst Published Jun 25, 2019, 7:02 AM IST
Highlights

நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் பல திட்டங்களை செயல்படுத்திஉள்ளது. ஆனால், திடீரென ஆட்சிக்கு வந்த நீங்கள்,   ‘காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்கிறீர்கள். நீங்கள்தான் இந்த நாட்டை முன்னேற்றியதாகக் கூறுகிறீர்கள். இது, பச்சை பொய் அல்லவா?
 

நம் பிரதமர் மிகச் சிறந்த வியாபாரி. அவரிடம் உள்ள பொருளை தந்திரமாக விற்கும் திறமை படைத்தவர். அந்தத் திறமை, காங்கிரசிடம் இல்லை என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். 
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி மோடி அரசை கடுமையாகத் தாக்கி பேசினார். பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவையில் இருந்தபோதே ஆதிர்ரஞ்சன் பாஜகவையும் மோடி அரசையும் தாக்கி பேசினார்.


“உண்மைகளை மறைத்து காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை நகல் எடுத்தும் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த 23 திட்டங்களில்19 திட்டங்களுக்கு பெயரை மாற்றி  தாங்கள் கொண்டுவந்த திட்டமாகப் பெருமை பேசுகிறது மத்திய அரசு.  நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் பல திட்டங்களை செயல்படுத்திஉள்ளது. ஆனால், திடீரென ஆட்சிக்கு வந்த நீங்கள்,   ‘காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்கிறீர்கள். நீங்கள்தான் இந்த நாட்டை முன்னேற்றியதாகக் கூறுகிறீர்கள். இது, பச்சை பொய் அல்லவா?


இப்போது எங்களுக்கு 52 எம்பிக்கள்தான் உள்ளனர். எனினும், சாதாரண மக்களுக்காக இந்தச் சபையில் தொடர்ந்து போராடுவோம். குடியரசுத் தலைவர் உரையில் ஓரிடத்தில்கூட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயர் உச்சரிக்கப்படவில்லை. நேரு பெயரை நீங்கள் உச்சரித்திருந்தால், உங்கள் மதிப்பு குறைந்துவிடப் போவதில்லை. ஆனாலும், நீங்கள் அவர் பெயரை சொல்லவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில்தான் நாட்டில் பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சி, தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டது. நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி., என்.டி.பி.சி., எஸ்.பி.ஐ., எச்.ஏ.எல்., என லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. காங்கிரஸ்தான் இந்தத் தேசத்தின் ஆன்மா. இந்தியா என்றாலே, காங்கிரஸ்தான். 
தகவல் பெறும் உரிமைச் சட்டம், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம் போன்ற பல சட்டங்களை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ்தான். பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினோம் என நீங்கள் பெருமையாக கூறுகிறீர்கள். அந்த ஏவுகணைகள் காங்கிரஸ் ஆட்சியின்போது தயாரிக்கப்பட்டவை என்பதை மறந்துவிட்டீர்கள்.
நம் பிரதமர் மிகச் சிறந்த வியாபாரி. அவரிடம் உள்ள பொருளை தந்திரமாக விற்கும் திறமை படைத்தவர். அந்தத் திறமை, காங்கிரசிடம் இல்லை. அதனால்தான் தேர்தலில் நாங்கள் தோற்றோம். நாடு முழுவதும் வறட்சி தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதுபற்றி அரசு கவலைப்படவில்லை. மோடியைப் புகழ்ந்தால், பதவி கிடைக்கும் என்பதால், பாஜக எம்.பி.,க்கள் வாய்க்கு வந்தபடி புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.” என்று பேசினார்.
பிரதமர் மோடியைப் பற்றியும் பாஜக குறித்தும் ஆதிர் ரஞ்சன் பேசிய சில வார்த்தைகளை சபைக் குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். ஆதிர்ரஞ்சன் சவுத்ரி ஆவேசமாக பேசியபோது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவும் காங்கிரஸ் தலைவர் ராகுலும் அவரை ஊக்கப்படுத்தும்விதமாக மேஜையைத் தட்டினர். 

click me!