திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்... திமுகவை குற்றம்சாட்டிய காங்கிரஸுக்கு திமுக பதிலடி!

By Asianet TamilFirst Published Jan 11, 2020, 7:36 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் இந்த அறிக்கையினால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி அளிக்கும் வகையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்துள்ளார்.

திமுகவை கண்டித்து காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு பதிலடியாக திமுக தரப்பிலும் அறிக்கை வெளியாகி உள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு தரவில்லை என்று திமுக மீது காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. அந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வண்ணம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் திமுகவை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். அதில், “ஊரக உள்ளாட்சி தேர்தலில் எந்த ஒப்பந்தமும் இல்லாமல், மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.


திமுக தலைமை அறிவுறுத்திய இடங்களில்கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இரண்டு இடங்கள் மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில், ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியோ துணைத் தலைவர் பதவியோ வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது” என்று அறிக்கையில் சாடியிருந்தனர்.
இந்த அறிக்கையினால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி அளிக்கும் வகையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்துள்ளார்.


“ திமுக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இடபங்கீடு பேச்சில் முடிவு எட்டப்படவில்லை. எனவே அங்கு காங்கிரஸ் போட்டியிட்டது. பிரச்னை இல்லாமல் யாருக்கு வெற்றி கிடைக்குமோ அவர்கள் வெற்றி பெற்று வரட்டும் என்றே தலைவர்கள் பேசி முடிவெடுத்தார்கள். திடீரென இப்போது காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. எந்த மாவட்டத்தில், எந்த பதவிக்கு என அவர்கள் ஆதாரத்துடன் சொல்லியிருந்தால் பேச வசதியாக இருந்திருக்கும். ஆனாலும், வெளிப்படையாக இப்படி அறிக்கை வெளியிடுவது நல்லதல்ல.” என்று தெரிவித்துள்ளார்.

click me!