
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரகுபதி, பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால் இம்மூன்று பேரையும் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற திமுக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் எடப்பாடியை விமர்சித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
"தமிழக அரசு விழாவை, ஏதோ அதிமுக விழா என்றும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஏதோ அதிமுக தலைமைக் கழக நிதியிலிருந்து செலவு செய்து திறப்பது போலவும் நினைத்துக் கொண்டு, திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்யும் புது அரசியல் அநாகரிகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்திருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல."
"முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில், பொதுமக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்திருப்பது, அவர்களுக்கு வாக்களித்து, தேர்வு செய்த பொது மக்களை கைது செய்வது போன்ற செயல் என்பதை முதலமைச்சர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்." என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து புதுக்கோட்டையில் இன்று மாலை 4 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தாறுமாறான அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அதிமுக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் திமுக இன்று நடத்தும் ஆர்ப்பாட்டம், அதிமுகவுக்கு எதிரான போர் என்று திமுக உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.