மீண்டும் ஸ்டாலின் வீட்டுக்கு வந்த பொன்முடி...! மனக்கசப்பு தீர்ந்தது!!

By Selva KathirFirst Published Jan 19, 2019, 9:23 AM IST
Highlights

மனக்கசப்பால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்து வந்த பொன்முடி மீண்டும் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.

மனக்கசப்பால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்து வந்த பொன்முடி மீண்டும் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.

தி.மு.க தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்றதும் முதல் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் தான் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் விழுப்புரம் மாவட்ட தி.மு.க செயலாளர் பொன்முடி. பொன்முடி ஸ்டாலினுக்கு மிக நீண்ட கால நெருக்கமான நண்பர். 2001-ம் ஆண்டு முதல் தான் ஸ்டாலின் – பொன்முடி உடனான நட்பு ஆழமானது. அப்போது சட்டப்பேரவைக்கு வரும் போது ஸ்டாலின் – பொன்முடி இணைந்து வருவது வழக்கம்.

 

 இதே போல் கலைஞரிடத்திலும் நெருக்கமாக இருந்த பொன்முடி அவ்வப்போது கருணாநிதி ஸ்டாலின் இடையிலான ஊடலையும் சரி செய்து வந்தார். மேலும் ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்து கலைஞரிடம் அப்டேட் செய்வதும் கூட பொன்முடி என்று ஒரு பேச்சு உண்டு. அந்த அளவிற்கு ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்த பொன்முடி திடீரென கடந்த ஒரு மாத காலமாக சென்னை பக்கமே வரவில்லை.

இதற்கு காரணம் என்ன என்று கேட்ட போது ஸ்டாலினுடன் இருக்கும் சிலர் கூறிய வார்த்தைகள் தான் பொன்முடியை காயப்படுத்திவிட்டதாக கூறுகிறார்கள். ஸ்டாலின் தலைவரானதும் விழுப்புரத்தில் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தை கரூரில் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தோடு ஒப்பிட்டு சிலர் பொன்முடியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. 

விழுப்புரத்தை விட கரூரில் செந்தில் பாலாஜி கூட்டத்தை அதிகமாக கூட்டியதாகவும், பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்தியதாகவும் பொன்முடி காதுபடவே அவர்கள் பேசியுள்ளனர். இதனை அங்கீகரிக்கும் வகையில் ஸ்டாலினும் செந்தில்பாலாஜியை வெளிப்படையாக பாராட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பே பொன்முடி விழுப்புரத்திலேயே முடங்க காரணம் என்று சொல்லப்பட்டது. 

இந்த நிலையில் ஸ்டாலினே பொன்முடியை தொடர்பு கொண்டு சென்னை வரச் சொன்னதாகவும், அதன் பிறகே பொன்முடி சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது மனவருத்தம் நீங்க நீண்ட நேரம் ஸ்டாலினும் – பொன்முடியும் பேசிக் கொண்டிருந்ததாகவும் தான் தி.மு.கவிற்காக எவ்வளவு உழைத்துள்ளேன் என்பதை உணர்ச்சிப் பெருக்குடன் பொன்முடி பட்டியலிட்டதாகவும் சொல்கிறார்கள். இதன் பிறகு ஸ்டாலின் பொன்முடிக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் கூறியதும் மன வருத்தம் நீங்கி பொன்முடி உற்சாகமாக புறப்பட்டதாக சொல்கிறார்கள். இதன் மூலம் பொன்முடி – ஸ்டாலின் இடையே பிரச்சனையை ஏற்படுத்த முயன்ற மேலிட நிர்வாகி ஒருவர் முகத்தில் கரியை பூசிவிட்டது போல் ஆகிவிட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள். 

click me!