திமுக முதல்வர்கள் தீபாவளி வாழ்த்து சொல்லமாட்டார்கள்.. வாழ்த்து கேட்டவரை ட்விட்டரில் கும்மிய திமுக எம்.பி.!

By Asianet TamilFirst Published Nov 5, 2021, 8:57 AM IST
Highlights

"அநேகமாக  வாழ்த்து தெரிவிக்காத  ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலிதான். என் எதிர்பார்ப்பு இந்த முறை எல்லோரையும் அரவணைக்கும் ஒரு ஆட்சி திமுக வழங்கும் என்று. அவ்வாறு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது."

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தீபாவளிக்குப் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காதததைச் சுட்டிகாட்டியவருக்கு,  ‘திமுக முதல்வர்கள் வாழ்த்து சொல்லமட்டார்கள்’ என்று திமுக எம்.பி. செந்தில்குமார் பதிலளித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் பண்டிகைகளுக்கு  திமுக தலைமை வாழ்த்து தெரிவிப்பதையும் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காததையும் பாஜகவும் அதன் ஆதரவு இயக்கங்களும் பண்டிகைக் காலங்களில் சுட்டிகாட்டுவது வழக்கம். பல காலமாக இதுதொடர்ந்தாலும், சமுக ஊடகங்கள் பெருகிவிட்ட காலத்தில், அதுதொடர்பான விவாதங்கள் எழுவது வாடிக்கையாகிவிட்டது.  தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது சமூக ஊடகங்களில் சர்ச்சையாகக் கிளப்பட்டது.

தீபாவளி பண்டிக்கைக்கு இடையேயும் சமூக ஊடகங்களில் பாஜகவினர் பலர் பதிவிட்டு, திமுகவையும் முதல்வரையும் விமர்சித்தனர். அரசியல் விமர்சகரான சுமந்த் சி.ராமனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காததைச் சுட்டிகாட்டி ட்விட்டரில் பதிவிட்டார். “தீபாவளி பண்டிகை ஹிந்து மதத்தை சார்ந்த பெரும்பாலானோரால்  கொண்டாடப்படுகிறது. ஒரு கட்சி தலைவர் வாழ்த்து தெரிவிப்பது அவர் விருப்பம். முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பது அவர் கடமை. பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவிக்கிறார். ஆனால், பெரும்பாலும் ஹிந்து மக்கள் வாழும் மாநிலத்தின் முதல்வர் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

அநேகமாக  வாழ்த்து தெரிவிக்காத  ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலிதான். என் எதிர்பார்ப்பு இந்த முறை எல்லோரையும் அரவணைக்கும் ஒரு ஆட்சி திமுக வழங்கும் என்று. அவ்வாறு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.” என்று தெரிவித்திருந்தார். இன்னொரு ட்விட்டர் பதிவில், “மேலும் உலகத் தலைவர்கள் ஜோ பிடன், போரிஸ் ஜான்சன் மற்றும் பல உலகத் தலைவர்கள் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இம்ரான்கான் மட்டுமல்ல. எனவேம் ஒருவேளை நீங்கள், நான் பாகிஸ்தானுக்குப் பதிலாக அமெரிக்கா அல்லது இங்கிலாந்துக்கு செல்லலாம் என்று பரிந்துரைக்கலாம்.” என்று திமுகவினரை கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சுமந்த் சி.ராமனின் ட்விட்டர் பதிவுகளுக்கு தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார். அதில், “பிடன் சொல்லிட்டாரு, போரீஸ் ஜான்சன் சொல்லிட்டாரு. இம்ரான்கான் சொல்லிட்டாரு. அதனால் என்ன? முதல்வர் பேரறிஞர் அண்ணா சொல்லவில்லை. முதல்வர் கலைஞர் கருணாநிதி சொல்லவில்லை. முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்ல மாட்டார். திமுக முதல்வர்கள் என்றும் சொல்ல மாட்டார்கள். நாங்கள் பகுத்தறிவுவாதிகள். உங்களுடைய பிரச்சினை என்ன.?” என்று செந்தில்குமார் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
 

tags
click me!