பெட்ரோல், டீசல் விலையை விடியா அரசு குறைக்கப்போவது எப்போது..? எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.!

By Asianet TamilFirst Published Nov 4, 2021, 9:16 PM IST
Highlights

மக்கள் நலனுக்காக மத்திய அரசு தன் கலால் வரியை பெட்ரோலுக்கு ரூ.5 மற்றும் டீசலுக்கு ரூ.10 விலை குறைப்பு செய்துள்ளதற்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

தேர்தல் வாக்குறுதியில் இன்னும் மீதமுள்ள பெட்ரோலுக்கு ரூ. 2 மற்றும் டீசலுக்கு ரூ. 4 விலை குறைப்பை திமுக அரசு முழுமையாக நிறைவேற்றுவது எப்பொழுது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டரின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. இதனால், மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முன் வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டர் ரூ.10 குறைத்து, தீபாவளி பரிசாக மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. மத்திய அரசின் கலால் வரியைக் குறைத்ததன் மூலம் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டது.

இந்த விலைக் குறைப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்திருந்தார். பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி குறைப்பை வரவேற்பதாகவும் இதன்மூலம்  மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதேபோல அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மக்கள் நலனுக்காக மத்திய அரசு தன் கலால் வரியை பெட்ரோலுக்கு ரூ.5 மற்றும் டீசலுக்கு ரூ.10 விலை குறைப்பு செய்துள்ளதற்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

பெட்ரோல் / டீசல் விலை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு, பெயரளவில் பெட்ரோலுக்கு மட்டும் ரூ 3 விலை குறைப்பு செய்த திமுகவின் விடியா அரசே!  தங்களின் தேர்தல் வாக்குறுதியில் இன்னும் மீதமுள்ள பெட்ரோலுக்கு ரூ. 2 மற்றும் டீசலுக்கு ரூ. 4 விலை குறைப்பை முழுமையாக நிறைவேற்றுவது எப்பொழுது?” என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!