பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் மாஸ் காட்டும் பாஜக மாநில அரசுகள்.. திண்டாடும் எதிர்க்கட்சி மாநில அரசுகள்.?

By Asianet TamilFirst Published Nov 4, 2021, 11:06 PM IST
Highlights

பாஜக மாநில அரசுகள் போட்டிப்போட்டுக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளன. 

 மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்த நிலையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு அதன் விலையைக் குறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. 

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவந்த நிலையில், மத்திய அரசு இந்த எரிபொருட்கள் மீதான கலால் வரியை அதிரடியாகக் குறைத்தது. இதன்படி லிட்டர் பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.10 என விலை குறைப்பு தீபாவளி திருநாளான இன்று அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க மாநில அரசுகள் விற்பனை வரி, வாட் வரியைக் குறைக்க முன்வர வேண்டும் என்றும் மத்திய அரசு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளன. அஸ்ஸாம் பாஜக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ரூ. 7 வரை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பீகாரில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ. 1.30-ம், டீசல் மீதான வரி ரூ. 1.90-ம் குறைத்துள்ளது. கர்நாடகா பாஜக அரசும் வாட் வரியை அதிரடியாக குறைத்துள்ளது. இதன்படி பெட்ரோல் மீதான வாட் வரி ரூ. 7-ம், டீசல் மீதான வாட் வரி ரூ. 7-ம் குறைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 

இதேபோல கோவா பாஜக அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை அரசு குறைத்துள்ளது. இதன்மூலம் கோவாவில் டீசல் லிட்டருக்கு ரூ. 17, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 12 குறைய உள்ளது. திரிபுரா பாஜக அரசு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ரூ. 7 குறைத்துள்ளது. உத்தரகாண்ட் பாஜக அரசு  பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ. 2 குறைப்பதா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மத்திய அரசின் வரிக்குறைப்பையும் சேர்த்து பெட்ரோலும், டீசலும் ரூ. 12 வரை குறைக்கப்பட்டுள்ளது. 

இதேபோல இமாசலப் பிரதேசம், மணிப்பூர் பாஜக அரசுகளும், புதுச்சேரியில் பாஜக கூட்டணி அரசும் வாட் வரியைக் குறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. பாஜக மாநில அரசுகள் போட்டிப்போட்டுக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளன. 

tags
click me!