
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு முடியும் கடைசி நாளில்தான் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவதா? என்றும் காவிரி மேலாண்மை அமைக்க தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, காவிரி விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து தமிழகத்தை ஏமாற்றுகின்றன என்று கூறினார்.
மேலும் அவர் அவசியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு முடியும் கடைசி நாளில்தான் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்களுடன் ஆலோசிப்பதா? என்று கேள்வி எழுப்பினார்.
இன்று மாலை கெடு முடியும்போது அமைச்சரவையைக் கூட்டுவதால் எந்த பலனும் இல்லை. உச்சநீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடு முடிவடையும் வரை திமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அனைத்து கட்சி கூட்டத்தின்போது பிரதமரை சந்திக்க முடியாது என்று பிரதமர் அலுவலகத்தில் கூறிவிட்டார்கள். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க சொல்கிறார்கள் முதலமைச்சர் எங்களிடம் கூறினார். அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்கவில்லை என்றாலும், முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் டெல்லி சென்று பிரதமரை சந்தித்திருக்கலாமே? அதேபோல் எம்.பிக்களும் பிரதமரை முற்றுகையிட்டிருக்கலாமே? என்றார்.
தற்கொலை செய்வேன் என்று கூறும் அதிமுக எம்.பி.க்கள், ஏன் இத்தனை நாட்களில் அதைச் சொல்லவில்லை. தற்கொலை செய்வதற்கு பதில் பிரதமர் அலுவலக வாசலில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியிருக்கலாமே? காவிரியில் 14 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்காமல் போனது வழக்கறிஞர்கள்தான் காரணம் என்று துரைமுருகன் கூறினார்.