முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்..!

By vinoth kumarFirst Published May 7, 2021, 9:37 AM IST
Highlights

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உறுதிமொழியேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். 

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உறுதிமொழியேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. மேலும் திமுக சின்னத்தில் போட்டியிட்ட 8 பேர் வெற்றி பெற்றனர். இதுதவிர கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த காங்கிரஸ் 18 இடங்களிலும், விசிக 4, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இதனால் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, கடந்த 4ம் தேதி நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, நேற்று முன்தினம் 5ம் தேதி தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் அவர் வழங்கினார். இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பதற்கான கடிதத்தை தமிழக ஆளுநர் 5ம் தேதி வழங்கினார். இந்நிலையில், தமிழகத்தில் புதிய அமைச்சரவை குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்திய, மு.க.ஸ்டாலின் அதன் பின்னர் புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்குவது குறித்த பட்டியலை தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, அந்தப் பட்டியலை ஏற்றுக் கொண்ட ஆளுநர் மாளிகை நேற்று மாலையில் புதிய அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டது.

அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, பொன்முடி, மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதோடு, இந்த புதிய அமைச்சரவையில் கலைஞர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மு.க.ஸ்டாலின் உள்பட 14 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைச்சரவையில் அனுபவமும், இளமையும் கலந்த பட்டியலாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பெண்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தின் 23-வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அதிமுகவில் சார்பில் ஓ.பன்னீர்செல்வம், தனபால், நவநீதகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

click me!