13 மாவட்டங்களுக்கு ஓர் அமைச்சர்கூட கிடையாது... எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை அமைச்சர்கள்..?

By Asianet TamilFirst Published May 6, 2021, 10:35 PM IST
Highlights

புதிதாகப் பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் 13 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
 

தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் 33 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். தற்போது தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக 34 பேர் வரை மட்டுமே பதவியேற்க முடியும். பொதுவாக  ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அல்லது பழைய ஒருங்கிணைந்த மாவட்டம் என்ற அடிப்படையில் அமைச்சரவையில் பிதிநிதித்துவம் வழங்கப்படும். ஆனால், இந்த முறை பரவலாக எல்லா மாவட்டங்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் 23 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவி கிடைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு 3 அமைச்சர்கள் பதவி கிடைத்துள்ளது. கடலூர், திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 அமைச்சர்கள் கிடைத்துள்ளன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் 2 அமைச்சர்கள் அந்த மாவட்டத்துக்கு கிடைத்துள்ளனர். 
ஈரோடு, கரூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு  தலா ஓர் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. கோவை, தருமபுரியில் ஓரிடத்தில்கூட திமுக வெற்றி பெறாத நிலையில் அந்த மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. சேலத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வென்றது. அந்த ஒருவருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. மேலும் செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
 

click me!