கொடுத்த வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியாது.. அலறவிட்ட தி. வேல்முருகன்.. ஆடிப்போன ஸ்டாலின்.??

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2022, 10:20 AM IST
Highlights

நீட் விவகாரத்தில் பாஜகவை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. தொடர்ந்து இதே போன்று மத்திய அரசு இதில் செவிசாய்க்காமல் இருந்து வந்தால், நாளை தமிழக அரசே போராட்டத்தில் இறங்கலாம், தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம்,  எனவே போராட்டத்தின் மூலமே அனைத்தையும் நாம் வென்றெடுக்க முடியும். 

திமுக கொடுத்த நீட் விக்கு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என அதன் கூட்டணிக்  கட்சித் தலைவர்களில் ஒருவரான தி.வேல்முருகன்  கூறியுள்ளார்.  அவரின் இந்த கருத்து கூட்டணிக்குள் சலசலப்பை  ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

பத்து ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சி அமைத்துள்ளது. நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளாக அதிமுக-பாஜக திமுகவை கூட்டாக எதிர்த்து வருகின்றன. கொடுத்த வாக்குறுதிகளை திமுக ஏன் நிறைவேற்றவில்லை என்றும், பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக என்றும்  கேள்விகளால் முதல்வர் ஸ்டாலினை திணறடித்து வருகின்றன. ஆனால் கொடுத்த 500 வாக்குறுதிகளில் 300 நிறைவேற்றப்பட்டு விட்டது, மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர்கள் விளக்கம் கூறி வருகின்றனர்.

அதேபோல் ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சட்டமன்றத்தில் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்.பாலு தலைமையில் உள்துறை அமைச்சரை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேநேரத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டையும் திமுக மக்கள் மத்தியில் விளக்கிவருகிறது. அதாவது தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக முனைப்பு காட்டி வரும் நிலையில், அதற்கு மத்திய பாஜக  அரசு தொடர்ந்து தடைக்கல்லாக இருந்து வருகிறது என திமுகவினர் கூறிவருகின்றனர். இதே கருத்தையே திமுக கூட்டணி கட்சிகளும் தெரிவித்து வந்தாலும், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? என்ற கேள்விக்கு முடியாது,  சாத்தியமில்லை என்று திமுக கூட்டணி கட்சி தலைவர்களில் ஒருவரான தி.வேல்முருகன் பதில் அளித்துள்ளார்.

அவரின் இந்த பதில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதையும் தீர்க்கமாகவும், ஆவேசமாகவும் எதிர்க்கக் கூடியவர் தி. வேல்முருகன், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது முதல்  தெளிவு மிக்க அரசியல்வாதியாக அறியப்படுபவர் ஆவார். திமுக கூட்டணியில் இடம் பிடித்து பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று திமுகவுக்கு உற்றத் துணையாக செயல்பட்டு வருகிறார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை போல கொள்கை ரீதியாக திமுகவை ஆதரிக்கும் தலைவராகவும் அறியப்படுகிறார் இவர். இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக தனியார் தொலைக்காட்சி  நேர்காணலின்போது நெறியாளர் வைத்த கேள்விக்கே நீட் தேர்வை திமுக தனித்து நின்று நிறைவேற்றுவது சாத்தியமில்லை என கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து திமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதன் விவரம் பின்வருமாறு:- 

நீட் விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்துவது ஒருபுறமிருந்தாலும், கடந்த காலங்களில் மத்திய அரசு எதேச்சதிகாரபோக்குடன் நடந்து கொண்டபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் களத்தில் இறங்கி போராடியதுபோல் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் போராட்டக் களத்திற்கு வர வேண்டும், ஜல்லிக்கட்டு இனி நடக்கவே நடக்காது என  பீட்டா போன்ற அமைப்புகள் கூறிவந்தன. ஆனால் தமிழகத்தில் புரட்சி ஏற்பட்டு தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தும் நிலை வந்துள்ளது. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது, கோவையில், மதுரையில், சென்னையில் என எங்கு பார்த்தாலும் லட்சக்கணக்கான இளைஞர்கள், மக்கள் களத்தில் இறங்கினர். அதற்கு அஞ்சி மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது. வேளாண் சட்டத்திலும் இதே போல் தான் நடந்தது. எனவே நீட் விவகாரத்தில் மாநில அரசின் தன்னால் இயன்ற வரை அதற்கு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால் ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

மொத்தத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், தமிழ்நாட்டு சட்ட வரம்பு  எல்லைகளுக்கும் உட்பட்டு தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நீட் விவகாரத்தில் பாஜகவை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. தொடர்ந்து இதே போன்று மத்திய அரசு இதில் செவிசாய்க்காமல் இருந்து வந்தால், நாளை தமிழக அரசே போராட்டத்தில் இறங்கலாம், தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம்,  எனவே போராட்டத்தின் மூலமே அனைத்தையும் நாம் வென்றெடுக்க முடியும். தமிழக மாநில அதிகாரத்திலிருந்த கல்வியை கைப்பற்றி தன் அதிகாரத்திற்குள் மத்திய அரசு வைத்துக் கொண்டதால், இந்த விவகாரத்தில் மாநில அரசால் எதுவும் செய்ய முடியவில்லை. அதிகபட்சமாக மாநில அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சட்டம் இயற்றலாம், அவ்வளவுதான், அதாவது தமிழ்நாடு  சட்ட மன்றத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் உள்ள அதிகாரத்தை கொண்டு நீட் வாக்குறுதியை தமிழக அரசால் நிறைவேற்ற முடியாது. ஆனால் ஒரு நம்பிக்கையால் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின் இயங்கியலே தன்னம்பிக்கையின் அடிப்படையிலானதுதான். அந்த அடிப்படையில் தான் திமுக ரத்து ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
 

click me!