
விவசாயிகள் போராட்டத்தில் கைதான திமுகவினர் மண்டபத்தில் சீட்டாடும் காட்சிகள் வாட்ஸப்பில் வைரலாக பரவி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் வகையில் கர்நாடகாவில் தேர்தல் நடப்பதை கருத்தில் கொண்டு கர்நாடகாவுக்கு ஆதரவான நிலையை எடுத்தது. இதனால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் பொங்கி எழுந்தனர்.
தமிழகத்தில் 48 மணி நேர ரயில் மறியல் செய்ய முடிவெடுத்தனர். இந்த மறியலுக்கு அதிமுக , பாஜக ஆதரவளிக்காத நிலையில் அடுத்த பெரிய கட்சியான திமுகவும் , காங்கிரஸ் , மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் ஆதரவளித்தன. இதனால் அனைத்து கட்சிகளும் ரயில் மறியலில் ஈடுபட்டன.
சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும் , திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் விவசாயிகள் போராட்டத்தில் சிரத்தை எடுத்து தஞ்சையில் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தை கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றி அதை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளித்தார்.
பின்னர் 17 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பெரம்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். தமிழகம் முழுதும் திமுகவினரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மறியலில் கைதான மு.க.ஸ்டாலின் ஏசி மண்டபத்தில் அடைக்கப்பட்டதும், பிரியாணி உணவாக பறிமாறப்பட்டதும் ஏற்கனவே வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பான நிலையில் மீண்டும் இரண்டு வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னையில் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான திமுக தொண்டர்கள் நாள் முழுதும் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட , தங்களுக்கு பொழுது போகவேண்டும் என்பதற்காக ஆங்காங்கே கும்பல் கும்பலாக டேபிள் போட்டு அமர்ந்து கொண்டு சீட்டாடும் காட்சிகள் ஏதோ சீட்டாட்ட கிளப்பில் இருப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவை பார்க்கும் போது ஏற்படுகிறது.
பொதுவாக திமுக தொண்டர்கள் முன்பெல்லாம் தலைமை விடும் அழைப்புக்கு ராணுவ வீரர்கள் போன்று கட்டுப்படுவார்கள், தினசரி தலைவர் முரசொலியில் எழுதும் கடிதத்தை படித்துவிட்டு விஷயம் அறிந்தவர்களாக இருப்பார்கள்.
திமுக தலைமையின் கொள்கையை அழகாக பட்டி தொட்டி எல்லாம் கொண்டு செல்வார்கள். திமுகவில் பொறுப்புக்கு வர வேண்டுமானால் படித்திருக்க வேண்டும் அரசியலில் மற்ற கட்சிகளையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு விபரம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
அப்படிப்பட்டவர்கள் தான் திமுகவில் பொறுப்புக்கும் வந்தனர். ஆனால் காலப்போக்கில் கட்சியில் இருந்தவர்கள் பணபலம் அதிகார பலம் இருந்தால் போதும் என தமிழக அரசியலே மாறிப்போனபோது இதன் விளைவு காலப்போக்கில் திமுகவுக்குள்ளும் எதிரொலித்ததன் விளைவே கட்சித்தலைமை என்னதான் காவிரி மேலாண்மை விஷயத்தில் சீரியசாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் இப்படித்தான் ரிலாக்ஸாக இருப்போம் என்ற மெசேஜைத்தான் இந்த வீடியோ சொல்கிறது என அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர்.