
நகைக் கடன் தள்ளுபடி விவகாரத்திலும் ஆளும் திமுக அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது. அதன்படி, ஆட்சி அமைத்ததும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், அரசின் நகைக்கடன் தள்ளுபடி சலுகையை பெற, ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் கூட்டுறவு வங்கிகளின் வெவ்வேறு கிளைகளில் கடன் பெற்றுள்ளனர். மற்ற பலர் போலி நகைகளை அடகு வைத்தும் கடன் பெற்றுள்ளனர் என புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டு, நிலுவையில் உள்ள அனைத்து நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய கூட்டுறவு துறை உத்தரவிட்டது. அதன்படி, ஒரு மாவட்ட அதிகாரிகள், வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அத்துடன் நகைக்கடன் தள்ளுபடி சலுகை பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய, பல்வேறு நிபந்தனைகளையும் அரசு விதித்தது. அதன்படி, பயிர்க்கடன் தள்ளுபடி சலுகை பெற்றவர்கள், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நகைக் கடன்களுக்கு தள்ளுபடி சலுகை கிடையாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், ரேஷன் கார்டு, ஆதார்எண்ணை வழங்காதவர்கள், தவறாக வழங்கியவர்கள் என மேலும் பலரும் தள்ளுபடி சலுகை பெற தகுதி இல்லாதவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் கூட்டுறவுத்துறையின் புதிய பட்டியலின் படி 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 நகை கடன் விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. நகை கடன்கள் சலுகைக்கு தகுதியானவர்கள் 13.47 லட்சம் பேர் மட்டுமே இடம் பெற்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சியின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்துக் கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், கூட்டுறவுத் துறை மூலமாக வழங்கப்பட்ட 35 லட்சம் நகைக் கடன்களில் 14.5 லட்சம் நகைக் கடன்கள் மட்டுமே ஏற்புடையது என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஏழை, எளிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், வெற்றி பெற்ற பிறகு அதனைக் கிடப்பில் போடுவதும்தான் இன்றைய ஆட்சியாளர்களின் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. நகைக் கடன் தள்ளுபடி விவகாரத்திலும் ஆளும் திமுக அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. நம்பி வாக்களித்த மக்களை ஆளும் திமுக அரசு ஏமாற்றாமல் 5 சவரன் வரை அடமானம் வைத்த நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.