
விவசாயிகளுக்கு துரோகம் செய்த திமுக
தமிழக வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக 200 இளைஞர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி அளித்து வேளாண் தொழில் தொடங்க உதவி செய்யப்படும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 400கோடி ரூபாய் ஒதுக்கீடு, இயற்கை விவசாயத்திற்கான இயற்கை உரங்கள் தயாரிக்க 100 குழுக்கள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் வேளாண் பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் அத்துறை சார்ந்த அமைச்சர் கொள்கை விளக்க குறிப்பை வாசித்து இருப்பதாகவும், இது வேளாண் பட்ஜெட் அல்ல எனவும் விவசாயிகளை திமுக அரசு துரோகம் செய்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
தாலிக்கு தங்கம் திட்டம்
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, பட்டு வளர்ச்சித் துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு தனித்தனியாக அமைச்சர்கள் இருக்கும் நிலையில் அந்த துறையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் தாக்கல் செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி அதன் காரணமாக ஒரு லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார் ஏழை எளிய பெண்கள் பயன் பெறக்கூடிய அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். 5 சவரனுக்கு உட்பட்ட அனைத்து நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில் 48 லட்சம் பேர் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றிருப்பதாகவும் ஆனால் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மக்களை வாக்குகளை பெற மோசடி அறிவிப்பு
13 லட்சம் பேரின் நகை கடனையும் ஆய்வு செய்த பின்புதான் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளது ஏமாற்றம் அளிக்கும் செயல் என விமர்சித்துள்ளார்.
இத்தகைய கட்டுப்பாடுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார் எனவே மக்களை ஏமாற்றக் கூடிய வகையில் வாக்குகளைப் பெறுவதற்காகவே நகை கடன் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் இதனால் சுமார் 35 லட்சம் பேர் நகை கடன் தள்ளுபடி ஆகாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.