
தமிழகத்தில் 3 புதிய உணவு பூங்காக்கள்
வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 381 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 உணவுப் பூங்காக்கள் திண்டிவனம் தேனி மற்றும் மணப்பாறையில் அமைக்கப்படும் என கூறினார். மேலும்
தமிழ்நாடு மாநில மரமான பனை மரங்களை பாதுகாக்க 10 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்படும் என கூறினார். பனைமரம் ஏறுவதற்காக சிறந்த கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். உள்ளூர் மீன் வளர்ப்புக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அயிரை, செல் கெண்டை மற்றும் கல்பாசி போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் 7,500 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயம் அமைக்க பயிற்சி வழங்கப்படும் என கூறினார். தமிழகத்தில் மேலும் 10 இடங்களில் புதிய உழவர் சந்தைகள் அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உழவர் சந்தைகளில் காலையில் காய்கறிகளும் மாலையில் சிறுதானியங்களும் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
தரமான அச்சு வெல்லம் தயாரிக்க நிதி உதவி
தென்னை,மா,வாழை உள்ளிட்டவற்றின் சாகுபடிக்கு இடையே ஊடு பயிர்கள் சாகுபடி ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பன்னீர் செல்வம், கோயம்புத்தூர்,தேனி,கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தனியார் பங்களிப்புடன் புதிய காய்கறி மொத்த விற்பனை வளாகம் அமைக்கப்படும் என கூறினார். மேலும் மயிலாடுதுறையில் இயங்காமல் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மாற்றுப்பயிர் திட்டத்தை 20 ஆயிரம் ஏக்கரில் செயல்படுத்தும் வகையில் 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். காய்கறிகள், பழங்கள், மலர் சாகுபடி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க மாற்று பயிர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் தரமான அச்சு வெல்லம் தயாரிக்க 100 விவசாயிகளுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
முருங்கை சாகுபடி பரப்பு அதிகரிக்க நடவடிக்கை
தமிழகத்தில் வேளாண் துறைக்கு 33 ஆயிரத்து 7 கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,
இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார். முருங்கை ஏற்றுமதி உள்ளிட்ட தேவைகளை ஊக்குவிக்க அதன் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கல்வராயன் மலை கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்து 250 ஏக்கரில் பூண்டு சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டத்தில் 4 ஆயிரத்து964 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்கள், வாய்க்கால் தூர்வாரும் பணிகளுக்கு 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்