பாஜகவில் இருந்து தன்னை நீக்க திமுகவும், விசிகவும் சதி...? நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு

By Ajmal KhanFirst Published Mar 29, 2022, 11:54 AM IST
Highlights

மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை மாற்றும் நடவடிக்கைகளில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக கலை, கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் மாற்ற இருப்பது தொடர்பான தகவல் பரவி வரும் நிலையில் இது தொடர்பாக தனது கருத்தை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ளார்.

தன்னிச்சையாக செயல்பட்ட காயத்ரி ரகுராம்?

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பிரிவுகளுள் ஒன்றாக இருக்கும் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 1ம் தேதி கலை கலாச்சார பிரிவில் இருந்து மாநில செயலாளர்களான ஃபெப்சி சிவா, நடிகர் பாபு கணேஷ், விருகை கணேஷ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, சர்மா, ரிஷி, உமேஷ் பாபு ஜெயபிரகாஷ் ஆகியோரை பொறுப்பில் இருந்து  அதிரடியாக நீக்கிவிட்டு புதிய  நிர்வாகிகளை  காயத்ரி ரகுராம் நியமித்தார். இதனால் அதிருப்தி அடைந்த பாஜக தலைமை கட்சியின் அனுமதியின்றி வெளியான உத்தரவை மறுத்து அறிக்கை  வெளியிட்டது. கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகிகளை நீக்கியது செல்லாது என பாஜகவின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்தார்.

பாஜக நிர்வாகிகள் மாற்றம்?

 நடிகை காயத்ரி ரகுராம் தன்னிச்சிசையாக முடிவு எடுத்து அறிவித்த காரணத்தால் பாஜக தலைவர் அண்ணாமலை கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. இந்தநிலையில் தான் மக்களவை தேர்தலை  எதிர்கொள்ளும் வகையில் பாஜக நிர்வாகிகளை மாற்றும் நடவடிக்கையில் தமிழக பாஜக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த பட்டியலில் காயத்திரி ரகுராம் பெயரும்  இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இதற்கு காயத்திரி ரகுராம் மறுப்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தன்னை பதவியில் இருந்து நீக்குவது பற்றி பாஜக நினைக்கவில்லையென்றும்,பாஜக தலைவர் தன்னை நீக்கமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடினமாக உழைத்தவர்களுக்கு பாஜக பதவி உயர்வு மட்டுமே தருவதாக கூறியுள்ளார். பாஜக எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

திமுக, விசிக சதி ?

  தன்னை பதவியில் இருந்து நீக்கி முடக்க திமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். திமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தன்னை பற்றி பொய்யான செய்திகளை முழுக்க முழுக்க பரப்புவுதாகவும் குற்றம்சாட்டினார். இந்தநிலையில் பாஜக  புதிய நிர்வாகிகள் பட்டியல் இரண்டொரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காயத்திரி ரகுராம் பெயர் அந்த பட்டியலில் இடம்பெறுமா? இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


 

click me!