திமுக-பாமக திடீர் கூட்டணி.. தவித்துப்போன அதிமுக.. நெமிலி ஊராட்சி ஒன்றியத்தை முதன்முறையாக தட்டிய தூக்கிய திமுக!

By Asianet TamilFirst Published Oct 30, 2021, 9:28 PM IST
Highlights

பாமகவோடு கூட்டணி அமைத்து துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்தப் பதவியை பாமகவுக்கு அளித்து திமுக முந்திக்கொண்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியை பாமகவுடன் கூட்டணி அமைத்து திமுக கைப்பற்றியது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் திமுக 8, பாமக 5, அதிமுக 4, சுயேச்சைகள் இருவர் வெற்றி பெற்றனர். இங்கு தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுக. அதிமுக என இரு கட்சிகளும் பாமகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், அக்டோபர் 20 அன்று தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற இருந்தது.

ஆனால், ஏற்கனவே நெமிலி ஒன்றியத் தலைவர் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுன்சிலர் மனோகரன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து. வழக்கு விசாரணையின்போது, “நெமிலி ஒன்றியத் தலைவர் பதவியைப் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கி புதிய அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், புதிய அறிவிப்பை வெளியிட்டு ஒரு வாரம் கழித்து தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

அதன்படி நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக கவுன்சிலர்களை ஒருவரும் பங்கேற்கவில்லை. பிற கட்சி கவுன்சிலர்கள் மட்டும் கலந்துகொண்டனர். தலைவர் பதவிக்கு திமுக சார்பில் வடிவேல் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து தலைவர் பதவிக்கு அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் பிற்பகலில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்  நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாமகவைச் சேர்ந்த கவுன்சிலர் தீனதயாளன் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவியைப் போலவே துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.

பின்னர்தான் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தைக் கைப்பற்ற திமுகவும் பாமகவும் கூட்டணி அமைத்தது என்று தெரிய வந்தது. பாமகவோடு கூட்டணி அமைத்து துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்தப் பதவியை பாமகவுக்கு அளித்து திமுக முந்திக்கொண்டது. இதற்கு முன்பு வரை நெமிலி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் மட்டுமே கைப்பற்றியிருந்தன. முதன்முறையாக பாமக ஆதரவுடன் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தை திமுக கைப்பற்றியுள்ளது.

click me!