பாஜகவின் கூட்டணி எப்போதும் அதிமுகவோடுதான்... தெறிக்கவிடும் அண்ணாமலை..!

By Asianet TamilFirst Published Oct 30, 2021, 8:44 PM IST
Highlights

இது சந்தர்ப்பவாத கூட்டணியும் கிடையாது. நல்ல சிந்தாந்தம் உள்ள கூட்டணி. எங்கள் கூட்டணியில் பிளவு வர காரணங்கள் எதுவும் கிடையாது. தமிழகத்தில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்பதுதுதான் பாஜகவின் விருப்பம். 

பாஜகவின் கூட்டணி எப்போதும் அதிமுகவுடன்தான் என்று  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை கல்விக்கொள்கையை மாற்றினார்கள். அதிலெல்லாம் இந்தியைப் படிக்க வேண்டும் என்றுதான் சட்டத்தைக் கொண்டு வந்தனர். ஆனால், பிரதமர் மோடி அப்படி இல்லை. புதிய கல்விக் கொள்கையில் விருப்பப் பாடங்களைக் கொண்டு வந்துள்ளார். தற்போது புதிய கல்விக்கொள்கையில் சில புதிய வழிமுறைகளையும் கொண்டு வந்திருக்கிறார்கள். மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.

புதிய கல்விக் கொள்கை சரியில்லை என்றால், அதில் எது சரியாக இல்லை என்பதை கல்வி அமைச்சர் தெளிவாக சொல்ல வேண்டும். பல மாநிலங்கள் புதிய கல்விக்கொள்கையை வரவேற்றுள்ளனர். ஏதோ புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு தானாகவே கொண்டு வரவில்லை. மாநிலங்களில் எல்லாம் கருத்து கேட்கப்பட்டன. ஆலோசகர்கள் கருத்துகளும் கேட்கப்பட்டன. இப்படியெல்லாம் கருத்துகள் கேட்டுதான் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் கிடையாது. இது சந்தர்ப்பவாத கூட்டணியும் கிடையாது. நல்ல சிந்தாந்தம் உள்ள கூட்டணி. எங்கள் கூட்டணியில் பிளவு வர காரணங்கள் எதுவும் கிடையாது. தமிழகத்தில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்பதுதுதான் பாஜகவின் விருப்பம். நல்ல தலைவர்கள் எல்லாம் அதிமுகவில் இருக்கிறார்கள். எனவே, எந்தப் பிரச்னையும் அங்கு இல்லை. பாஜகவின் கூட்டணி எப்போதும் அதிமுகவுடன்தான். அதிமுக போன்ற மிகப்பெரிய சக்தி வாய்ந்த கட்சியுடன்தான் பாஜக கூட்டணியில் இருக்கும்.
அக்கட்சிக்குள் இவர் வருவார், அவர் வருவார் என்பது குறித்து கருத்துச் சொல்ல எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பாஜகவை பொறுத்தவரை அதிமுகவோடு கூட்டணி தொடர்கிறது. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து கருத்து சொல்வதற்கு நான் யார்?

தமிழகத்தில் நீட்டை வைத்து அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன. நீட் தேர்வால் எந்த ஒரு மாணவரும் உயிரை விடக் கூடாது. தேர்தல் நேரத்தில் நீட் தேர்வு குறித்து வாக்குறுதி அளித்து பேசியதுதான் இங்கு பிரச்னையே. நீட்டை வைத்து பேசி இவர்களுக்கு என்ன கிடைக்கிறது எனத் தெரியவில்லை.” என்று அண்ணாமலை தெரிவித்தார். 

click me!