சிங்கிள் டிஜிட்த்தான் திமுக !! டபுள் டிஜிட் கண்டிப்பா வேணும் !! அடம் பிடிக்கும் காங்கிரஸ்… இழுபறியில் பேச்சு வார்த்தை !!

By Selvanayagam PFirst Published Feb 18, 2019, 9:28 AM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில், திமுக கூட்டணியில், தமிழக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து  டெல்லியில் பேச்சு வார்த்தை தொடங்கியுள்ள நிலையில் தங்களுக்கு 16 தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் அடம் பிடிப்பதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில்  மதிமுக, இடது சாரிகள். விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இந்தக் கூட்டணியில் பாமகவை இணைத்துக் கொண்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கழற்றி விடப்பலாம் எனவும் ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. 

இதற்கிடையில், காங்கிரஸ்  கட்சிக்கு ஒதுக்க விரும்பும் தொகுதிகளின் பட்டியலை, அக்கட்சி மேலிடத்தில் ஒப்படைக்கும்படி, சமீபத்தில், தி.மு.க., மகளிர் அணி மாநில செயலர், கனிமொழி, முதன்மை செயலர், டி.ஆர்.பாலு, ஆகியோரை, ஸ்டாலின், டெல்லிக்கு அனுப்பி வைத்தார். 

காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேல் வீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.


அதேசமயம், தமிழக, காங்கிரஸ் கட்சியின் தலைவர், கே.எஸ்.அழகிரியும், காலை, மேலிட அழைப்பின் படி, அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அகமது படேல் முகுல் வாஸ்னிக், கே.எஸ்.அழகிரி ஆகியோர், தொகுதி ஒதுக்கீடு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கடந்த, 2004, 2009 லோக்சபா தேர்தல்கள், 2016 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., - காங்., கூட்டணி போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள் விபரத்தை, ஆய்வு செய்தனர். மொத்தம் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், காங்கிரசிற்கு சாதகமான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. 

இதனிடையே ஸ்டாலின் கொடுத்தனுப்பிய பட்டியலில், காங்கிரசுக்கு  ஒதுக்கப்பட்ட தொகுதிகள், ஒற்றை இலக்கத்தில் இருந்தன. எனவே, இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கும்படி, காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது..இதை தொடர்ந்து, இரு தரப்பிலும் பூர்வாங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இரு கட்சிகளின் தலைமையிடம், ஆலோசித்த பின், அடுத்தக்கட்டபேச்சில், தொகுதிகள் பங்கீடு இறுதி செய்யப்படும் என, காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

click me!