என்னப் பார்த்து காப்பி அடிக்கிறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்ல!! ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட கமல்ஹாசன்..!

By Asianet TamilFirst Published Feb 18, 2019, 9:26 AM IST
Highlights

அரசியலில் நான் ஒரு சிறுவன். சிறுவனாகிய நான் நடத்திய கிராம சபை கூட்டத்தைப் பார்த்து, ஊராட்சி சபை கூட்டம் நடத்தும் திமுகவுக்கு வெட்கம் இல்லையா? கிராம சபை என்ற ஒன்று இருப்பது முன்பே தெரியாதா? சட்டப்பேரவையில்  நான் நிச்சயம் சட்டையைக் கிழித்துக்கொள்ளமாட்டேன் கமல் விமர்சனம் செய்துள்ளார். 

‘அவசர கை குலுக்களில் எங்கள் கை அசுத்தமாகிவிடக் கூடாது’ என்று திமுகவை ஊழல் கட்சி என்று மறைமுகமாக சாடிய கமல், இன்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை நேரடியாகத் தாக்கி கடுமையாகப் பேசியிருக்கிறார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் மு.க. ஸ்டாலினை கடுமையாகத் தாக்கி பேசினார். “திறந்த புத்தகமான என் வாழ்க்கையை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக நான் வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

அரசியலில் நான் ஒரு சிறுவன். சிறுவனாகிய நான் நடத்திய கிராம சபை கூட்டத்தைப் பார்த்து, ஊராட்சி சபை கூட்டம் நடத்தும் திமுகவுக்கு வெட்கம் இல்லையா? கிராம சபை என்ற ஒன்று இருப்பது முன்பே தெரியாதா? சட்டப்பேரவையில்  நான் நிச்சயம் சட்டையைக் கிழித்துக்கொள்ளமாட்டேன். 

அப்படியே சட்டை கிழிந்தாலும் புது சட்டையை போட்டுக்கொண்டுதான் வெளியே வருவேன்” மு.க.ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். அதிமுகவுடனான மோதல் போக்குக்கு பிறகே கமல்ஹாசன் அரசியல் களத்தில் குதித்தார். தொடர்ந்து அதிமுக அரசை விமர்சித்து பேசிவந்த கமல், திமுக குறித்து விமர்சித்து பேசவில்லை. ஆனால், கடந்த வாரம் திமுக ஊழல் கட்சி என்று மறைமுகமாக விமர்சித்த கமல், தற்போது நேரடியாக ஸ்டாலினையும் திமுகவையும் தாக்கிப் பேசியிருக்கிறார். 

கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கு கோரியபோது ஏற்பட்ட அமளியில் ஸ்டாலின் சட்டைக் கிழிந்தது. கிழிந்த சட்டையோடு மீடியாக்களை அழைத்து பேட்டிக் கொடுத்தார் ஸ்டாலின். தற்போது அதை நினைவூட்டி ஸ்டாலினை கிண்டல் செய்திருக்கிறார் கமல்.

  

நிகழ்ச்சிக்குப் பின்னர் கமல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, “ திமுகவை மறைமுகமாக விமர்சிக்கவில்லை. நேரடியாகவே விமர்சிக்கிறேன். நான் திமுகவை கடுமையாக விமர்சிக்க திமுகவே காரணம். கூட்டணியில் இடம் பெற முடியாததால் திமுகவை விமர்சிக்கவில்லை.” என்று கமல் தெரிவித்தார். டிடிவி தினகரனுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வருகிறதே என்ற கேள்விக்கு, “அது உங்களுக்கு வேண்டுமானால் நல்ல தகவலாக இருக்கலாம், எனக்கு இல்லை” என்றும் கமல் தெரிவித்தார்.

click me!