ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதி ஒதுக்கீடு…. திமுகவின் நிபந்தனையால் அதிர்ந்து போன காங்கிரஸ் !!

By Selvanayagam PFirst Published Oct 11, 2018, 7:55 AM IST
Highlights

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதி ஒதுக்கீடு செய்ய முடியும் என திமுக கறரராக சொல்லிவிட்டதால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி.மு.க.,வுடனான காங்கிரசின் கூட்டணி பேச்சுவார்த்தை, இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனாலும், இதுகுறித்த திரைமறைவு பேச்சு, இறுதிக்கட்டத்தில் உள்ளது. 'இம்முறை நாங்கள் அதிக தொகுதிகளில் போட்டியிடப் போவதால், ஒற்றை இலக்கத்தில் தான் உங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியும்' என, தி.மு.க., தரப்பு, தெளிவாக கூறிவிட்டது

இதனால் தான், தி.மு.க.,வுக்கு மாற்றாக, சில யோசனைகளை, தமிழக காங்கிரஸ் தலைமை முன்வைத்ததாக கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என திருநாவுக்கரசர் உள்ளிட்ட சிலர் ஆலோசனை கூறியதாக தெரிகிறது.

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத  காங்கிரஸ் மேலிடம் திமுகவுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது.  இந்நிலையில் தி.மு.க., தலைமையின் மிக முக்கிய உறவினர், அண்மையில் டெல்லியில்  முகாமிட்டிருந்தார். அப்போது, அகமது படேல் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் நடந்த பேச்சில், சில விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

டெல்லியில் ஆட்சி அமைக்க நாங்கள் எதுவும் போட்டியிடப்போதில்லை அதனால் திமுகவின் வெற்றி எப்படியும் காங்கிரஸ் கட்சிக்கு பயன்படத்தான் போகிறது என்பதை திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, தொகுதிகளின் எண்ணிக்கையை பார்க்க வேண்டாம். வெற்றி தான் முக்கியம்' என, தி.மு.க., தரப்பில் சுட்டிகாட்டப்பட்டது. தமிழகத்தில், தொகுதி எண்ணிக்கையை காட்டிலும், கூட்டணி யாரோடு என்பது தான் முக்கியம் என, சோனியா மட்டுமல்லாது, அகமது படேல், குலாம்நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்களும் உறுதியாக இருந்தனர்.

இந்த நேரத்தில், பரிசோதனை முயற்சிகள் வேண்டாம். ஓட்டு வங்கி, உள்கட்டமைப்பு என எல்லா வகையிலும், ஏற்கனவே நிரூபணம் ஆன கட்சி, தி.மு.க., தான். மேலும், 2019 தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணியை ஏற்படுத்துவோம் என கூறினாலும், சமீபத்திய பல நிகழ்வுகள், அதற்கு நேர் எதிராக உள்ளன.


தேசியவாத, காங்., பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, இடதுசாரி ஆகிய கட்சிகள், ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், கூட்டணி அமைக்க மறுத்து விட்டன. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், தி.மு.க.,வையும் இழந்தால், தேசிய அளவில், காங்கிரசின் மீதான இமேஜ், இன்னும் மோசமாகும் என காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள்.

எனவே, இழுபறியை மேலும் நீட்டிக்காமல், தி.மு.க., தரும் தொகுதிகளை பெற்று, இதே கூட்டணியில் போட்டியிடலாம்; மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு, காங்கிரஸ் மேலிடம் வந்து விட்டது.

click me!