பேரவையில் ஒலித்த பிரபாகரன் பெயர்..! திமுக-அதிமுக இடையே காரசார விவாதம்..!

By Manikandan S R SFirst Published Jan 8, 2020, 11:44 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்தும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்.எல்.ஏ செம்மலை, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக திமுக போராடுவதை விமர்சித்தார். பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற சென்னை வந்த போது, அதை திமுக தலைமையிலான அரசு தடுத்தது என்றார். இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்த திமுக உறுப்பினரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான துரைமுருகன், புலிகளின் தலைவர் பிரபாகரனை தீவிரவாதி என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியது ஏன்? என கேள்வி எழுப்பினார். பிரபாகரன் நல்ல வழியில் சென்ற வரை முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆதரித்ததாகவும், வழிதவறிய போது தான் அவர்மீதான அனுதாபத்தை அதிமுக குறைத்தது என்றார். தொடர்ந்து, குடியுரிமை சட்டத்தால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவதாக துரைமுருகன் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் பழனிசாமி, 12 ஆண்டு காலம் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போது, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தராமல் என்ன செய்தது? என்றார். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் வரை மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என முதல்வர் பேசினார். மேலும் தமிழக மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

click me!