
திமுக, அதிமுகவும் அவற்றின் கடைசி அத்தியாயங்களை எழுதி வருகிறது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு, ஜெயலலிதாவின் மறைவு ஆகிய காரணங்களால், தமிழக அரசியலில் மாபெரும் வெற்றிடம் உருவாகியிருப்பதை மறுத்துவிட முடியாது. இருவரும் இல்லாத நிலையில், உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் ரஜினி, கமல் ஆகியோர் அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இருவருமே விரைவில் கட்சி தொடங்கி நேரடி தேர்தல் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்துவிட்டனர். ஆனால், அரசியலில் வெற்றிடம் எதுவும் உருவாகவில்லை என திமுக, அதிமுக கூறிவருகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய மாபெரும் இயக்கங்களையும் வீழ்த்தி தினகரன் வெற்றி பெற்றார். இதையடுத்து திமுக, அதிமுக மீதான மக்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர்.
இந்நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய திராவிட கட்சிகளின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக என்ற இயக்கத்தின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. திமுகவும் கடைசி அத்தியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் நல்லது எதுவும் நடக்கலாம் என மக்கள் நம்ப வாய்ப்பிருக்கிறது என தெரிவித்தார்.