அடம்பிடிக்கும் தலைவர்கள்.. கதற விடும் துரைமுருகன்..! தி.மு.க கூட்டணி களேபரம்..!

By Selva KathirFirst Published Feb 22, 2019, 9:39 AM IST
Highlights

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் தொகுதி உடன்பாடு முடிந்துள்ள நிலையில் மற்ற கட்சிகள் எல்லாம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றன.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் தொகுதி உடன்பாடு முடிந்துள்ள நிலையில் மற்ற கட்சிகள் எல்லாம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றன.

கூட்டணி குறித்து பேச எப்போது தி.மு.க கூப்பிடும் என்று இடதுசாரிகள், ம.தி.மு.க., வி.சி.க கட்சிகள் வழி மேல் விழி வைத்து காத்திருந்தன. அந்த கட்சிகள் எல்லாவற்றுக்கும் நேற்று காலை தான் உயிரே வந்தது. நேற்று காலை சுமார் எட்டு மணி அளவில் ஸ்டாலின் வீட்டில் இருந்து சென்ற தொலைபேசி அழைப்பு தான் பாலகிருஷ்ணனை எழுப்பியதாக சொல்கிறார்கள். காலை பத்து மணிக்கு அறிவாலயம் வந்துவிடுங்கள் பேசி முடித்துவிடலாம் என்று ஸ்டாலின் தரப்பு கூறிவிட துள்ளிக் குதித்து எழுந்த பாலகிருஷ்ணன் தனது படை பரிவாரங்களை திரட்டிக் கொண்டு சரியாக பத்து மணிக்கு அறிவாலயம் சென்றார். அவர்களை துரைமுருகன் வரவேற்று பேச்சுவார்த்தையை துவங்கினார். 

எடுத்த எடுப்பிலேயே மார்க்சிஸ்ட் கட்சி மூன்று தொகுதிகள் என்று ஆரம்பித்துள்ளது. மேலும் திருப்பூர், தென்காசி, மதுரை என ஒரு பட்டியலை வேறு பாலகிருஷ்ணன் கொடுத்துள்ளார். அதனை வாங்கி ஓரமாக வைத்துக் கொண்டு ஒரே ஒரு தொகுதி எந்த தொகுதி என்று சொல்லுங்கள் என்று துரைமுருகன் கேட்க பாலகிருஷ்ணன் மட்டும் அல்ல ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் சங்கடமாகியுள்ளனர். ஆனால் தி.மு.க தரப்பு அதை பற்றி எல்லாம் கவலைப்படவே இல்லை.

கடந்த முறை எந்த தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் டெபாசிட் கூட வாங்கவில்லை எனவே ஒரு தொகுதி மட்டும் தான் கொடுக்க முடியும் என்று பொன்முடி கூறியுள்ளார். ஆனால் அதனை எல்லாம் காதிலே வாங்கிக் கொள்ளாமல் 3 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் பாலகிருஷ்ணன். அப்படி என்றால் அப்புறம் வாருங்கள் என்கிற ரீதியில் மார்க்சிஸ்ட் டீமை வெளியே அனுப்பியுள்ளது தி.மு.க டீம். 

இதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் தலைமையில் மாலையில் அறிவாலயம் சென்றது. காலையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கொடுத்த அதே ட்ரீட்மென்ட் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவை ஆதரியுங்கள், சட்டமன்ற தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று துரைமுருகன் கூற முத்தரசன் தரப்பு அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துள்ளது. 

பிறகு வடசென்னை மற்றும் நாகை தொகுதிகள் வேண்டும் என்று முத்தரசன் கூற, அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. ஒரே ஒரு தொகுதிக்கு தான் வாய்ப்பு என்று துரைமுருகன் கூறியுள்ளார். இதனால் பேச்சு நீடிக்க எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதன் பிறகு வந்த ஜவாஹிருல்லாவுக்கு தொகுதி எல்லாம் கிடையாது, பிரச்சாரம் செய்யுங்கள், சட்டமன்ற தேர்தலில் தொகுதிகள் தருகிறோம் என்று கூறியுள்ளனர். 

இப்படியாக வரும் கட்சிகள் அனைத்திடமும் அ.தி.மு.க பாணியில் எடக்கு மடக்காகவே தி.மு.க டீம் பேசி வருகிறதாம். இப்படி ஒரு அணுகுமுறையை தி.மு.கவிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்காத கட்சிகள் கூட்டணி விவகாரத்தில் சற்று கலக்கத்தில் தான் உள்ளன. இந்த நிலையில் நாளை விசிக மற்றும் மதிமுகவுடன் தி.மு.க பேச்சு நடத்த உள்ளது. இதனால் தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை களைகட்டியுள்ளது.

click me!