மதிமுக, ஐஜேகே, விசிக, கொமதேக எம்.பி.க்களுக்கு சிக்கல்... உதயசூரியன் சின்னத்தில் வென்றதால் பதவியைப் பறிக்க வழக்கு!

By Asianet TamilFirst Published Sep 5, 2019, 9:55 PM IST
Highlights

 விழுப்புரம் தொகுதியில் விசிகவின் ரவிக்குமார்,  நாமக்கல் தொகுதியில் கொமதேகவின் சின்னராஜ், ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி, பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே-வின் பாரிவேந்தர் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். தேர்தலில் இந்த 4 பேரும் வெற்றி பெற்றனர். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களாகச் செயல்பட்டுவருகிறார்கள்.
 

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றிபெற்ற மாற்று கட்சியைச் சேர்ந்த 4  நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  நிரந்தர சின்னம் இல்லாத கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்க திமுக  தலைமை வற்புறுத்தியது. அதை திமுக கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொண்டன. இதன்படி விழுப்புரம் தொகுதியில் விசிகவின் ரவிக்குமார்,  நாமக்கல் தொகுதியில் கொமதேகவின் சின்னராஜ், ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி, பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே-வின் பாரிவேந்தர் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். தேர்தலில் இந்த 4 பேரும் வெற்றி பெற்றனர். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களாகச் செயல்பட்டுவருகிறார்கள்.
இந்நிலையில் இந்த 4 பேரும் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தேர்தல் விதிப்படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ளவர், அக்கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதம். எனவே இந்த 4 பேர் வெற்றி பெற்றதும் செல்லாது என அறிவிக்கக்கோரி  தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தேன். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை’ என ரவி குறிப்பிட்டுள்ளார்.


இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு விசாரித்தது.மனுவை முழுமையாக ஆய்வு செய்த நீதிபதிகள், மனு விசாரணைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தனர். இதனையடுத்து மனுவை விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!