திமுக கூட்டணிக்கு கமல் வரலாமா? நடிகர் வாகை சந்திரசேகர் என்ன சொல்கிறார்..!

By Asianet TamilFirst Published Feb 10, 2019, 2:58 PM IST
Highlights

நடிகர் கமல்ஹாசனை திமுக கூட்டணியில் சேர்க்க கட்சித் தலைமை முடிவு எடுத்தால், அதை ஏற்றுக்கொள்வோம் என்று திமுக எம்.எல்.ஏ.வும், கமலுக்கு எதிராக கண்ட அறிக்கையை வெளியிட்டவருமான நடிகர் வாகை சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனை திமுக கூட்டணியில் சேர்க்க கட்சித் தலைமை முடிவு எடுத்தால், அதை ஏற்றுக்கொள்வோம் என்று திமுக எம்.எல்.ஏ.வும், கமலுக்கு எதிராக கண்ட அறிக்கையை வெளியிட்டவருமான நடிகர் வாகை சந்திரசேகர் கூறியிருக்கிறார். 

“எங்கள் கைகள் சுத்தமாக உள்ளன. அவசர கைக்குலுக்களில் எங்கள் கைகள் அசுத்தமாகிவிடக் கூடாது. அழுக்கு நிறைந்த பொதியை சுமக்க நாங்கள் தயாராக இல்லை” என்று திமுகவைப் பற்றி நடிகர் கமல்ஹாசன் காட்டமாகப் பேட்டியளித்திருந்தார். கமலின் இந்தப் பேட்டி திமுகவை உசுப்பிவிட்டது. கமலுக்கு பதில் அளிக்கும் வகையில் வாகை சந்திரசேகர் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கமலை சாடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் சந்திரசேகர். 

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்புவிடுத்தார். காங்கிரஸ் அழைப்பை கமல் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரை திமுக ஏற்குமா என்ற சந்தேகம் அரசியல் உலகில் பேசப்படுகிறது.

 

இந்நிலையில் கமலை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் தலைவர் அளித்த பேட்டி தொடர்பாக வாகை சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு சந்திரசேகர் அளித்த பேட்டியில், “திமுகவைப் பற்றி கமல் தெரிவித்த கருத்து எங்களுக்குக் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், கூட்டணியில் யாரை சேர்க்க வேண்டும் என்பதெல்லாம் கட்சித் தலைமை எடுக்க வேண்டிய முடிவு. ஒரு வேளை கட்சித் தலைமை கூட்டணியில் கமலை சேர்த்துக்கொண்டால், அதை ஏற்றுக்கொள்வோம். அதே நேரத்தில் திமுகவைப் பற்றி கமல் தெரிவித்த கருத்தால் எங்களுக்கு ஏற்பட்ட காயம் அப்படியேத்தான் இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார். 

click me!