கே.எஸ்.அழகிரி அழைப்பு... ஸ்டாலின் கொதிப்பு!

By Asianet TamilFirst Published Feb 10, 2019, 1:52 PM IST
Highlights

திருநாவுக்கரசர் பரவாயில்லை என்ற நிலையை கே.எஸ்.அழகிரி ஏற்படுத்துவார் போல் என, அறிவாலய வட்டாரத்தில் பேசுகின்றனர். அதிமுகவை விட பேராபத்து மிக்கவர் கமல் என நினைக்கிறதாம் திமுக தலைமை. வழியில் ஓடிய ஓணானை மடியில் எடுத்து விட்ட கதையாக, கமலுக்கு ஒரு சீட் அளித்து வளர்த்துவிட திமுக துளியும் தயாராக இல்லை. 

மக்களவைத் தேர்தலில் திமுக - அதிமுகவுடன் கூட்டணி இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

இத்தோடு கமல் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, ஊழல் கட்சி என்று பேசியதை ஸ்டாலினால் ஜீரணிக்க முடியலையாம். மேலும், தான் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இது திமுக முகாமை உஷ்ணமாக்கியுள்ளது. கமல் பகுத்தறிவுக் கொள்கைகளை கடைபிடிப்பதால், திமுகவுக்கு எதிராக அரசியல் செய்யமாட்டார் என எதிர்பார்த்திருந்த அக்கட்சியினருக்கு கமலின் இந்த பேச்சு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

கமலை விமர்சித்து வேளச்சேரி எம்.எல்.ஏ.வும், நடிகருமான வாகை சந்திரசேகர் காட்டமான அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, கமல் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்ததை ஸ்டாலின் ரசிக்கவில்லை. கமலை வைத்து தன் தேர்தலை சந்திக்க வேண்டும் என நிலை திமுகவுக்கு இல்லை என்றும், வாக்குவங்கி இல்லாத கமலை கே.எஸ்.அழகிரி எதற்கு அழைக்கிறார் என்றும் திமுக காங்கிரஸிடம் பொறிந்து தள்ளியதாம். 

மேலும், திருநாவுக்கரசர் பரவாயில்லை என்ற நிலையை கே.எஸ்.அழகிரி ஏற்படுத்துவார் போல் என, அறிவாலய வட்டாரத்தில் பேசுகின்றனர். அதிமுகவை விட பேராபத்து மிக்கவர் கமல் என நினைக்கிறதாம் திமுக தலைமை. வழியில் ஓடிய ஓணானை மடியில் எடுத்து விட்ட கதையாக, கமலுக்கு ஒரு சீட் அளித்து வளர்த்துவிட திமுக துளியும் தயாராக இல்லை. 

நிலைமை இப்படி இருக்க அழகிரி எதற்கு கமல் வேண்டும் என அடம்பிடிக்கிறார் என விசாரித்தால், திமுக காங்கிரஸ் கூட்டணியில் கமல் இணைய வேண்டும் என்பது ராகுலின் விருப்பம் என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். மேலும், 3 மாதங்களுக்கு முன்பு கமலை ராகுல் இரண்டு முறை சந்தித்து பேசியதையும் சுட்டிக்காட்டுகின்றனர். காங்கிரசின் இந்தப் போக்கு திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளது என்பது மட்டும் தெரிகிறது.

click me!