
திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் எங்கள் மனதை புண்படுத்துகிறார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது எங்கள் கட்சிக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை. இம்முறை நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு எல்லாம் வழங்கபட்ட இடங்களை விட எங்களுக்கு மிகச் சொற்பமான இடங்களே கொடுக்கப்பட்டன. பட்டம்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி துணைத்தலைவர், விருதாச்சலம் அல்லது பண்ருட்டி நகராட்சித் துணைத் தலைவர், நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் என மூன்றில் ஒரு பதவி வழங்கப்படும் என்று முதல்வர் எங்களிடம் கூறினார்.
ஆனால், இந்த இடங்களை எல்லாம் திமுகவினர் கைப்பற்றியுள்ளனர். முதல்வரின் உத்தரவுக்குப் பிறகு திமுகவினர் பதவியை ராஜினாமா செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இன்றைக்கு மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவராக இருப்பதற்கு எங்களின் கட்சி சார்பாகவும் நாங்கள் வாக்களித்து உள்ளோம். முதல்வரை சந்தித்து வேண்டுகோளும் விடுத்தோம். ஆனால், இதுவரை எந்த ஒரு பதிலும் எங்களுக்கு வரவில்லை. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் முதல்வரின் உத்தரவுபடி பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள்.
ஆனால், எங்களின் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் ராஜினாமா செய்யாமல் இருக்கிறார்கள். இது ஏன்? அதேபோல தமிழக வாழ்வுரிமை கட்சியினரை திமுகவினர் மரியாதையாக நடத்தவில்லை. பல இடங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் எங்கள் கட்சியினரை புண்படுத்தி மனதளவில் காயப்படுத்துகிறார்கள். அதையும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.