DMK alliance : திமுக கூட்டணியில் அதிருப்தியில் சிபிஐ.? நாங்க மைனாரிட்டி பார்ட்னர் இல்லை.. கோபத்தில் முத்தரசன்!

By Asianet TamilFirst Published Jan 28, 2022, 9:36 PM IST
Highlights

பல நகராட்சிகள், மாநகராட்சிகளில் மிகக் குறைவாக வார்டுகள் ஒதுக்கப்படுவதாகவும் அதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மைனாரிட்டி பார்ட்னர் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.

வானவில் கூட்டணி எனப்படும் திமுக கூட்டணி 2018-ஆம் ஆண்டு முதல் வெற்றிக்கரமாக செயல்பட்டு வருகிறது. எந்தச் சிக்கலுமின்றி தொடரும் இந்தக் கூட்டணி 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை சேர்ந்து சந்தித்ததோடு, வெற்றியும் பெற்றன. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இக்கூட்டணி நீடிக்கிறது. கடந்த காலங்களில் மாநில தலைமை பேசி கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை சதவீதம் இடம் என்று முடிவு செய்யப்பட்டுவிடும். எந்தெந்த வார்டுகள் என்பதையெல்லாம் மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வார்கள். இந்த முறை மேயர், சேர்மன் போன்ற பதவிகள் மறைமுகமாகத் தேர்வு செய்யப்பட இருப்பதால், வார்டு கவுன்சிலர்களைத் தேர்வு செய்யத்தான் தேர்தல் நடைபெற உள்ளது.

எனவே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகலைப் பிரித்துக்கொள்வதில்தான் பேச்சுவார்த்தை மாவட்ட அளவில் நடைபெற்று வருகின்றன. என்றாலும் வார்டுகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், திமுக தலைமையிடம் நேரடியாகவும் கூட்டணி கட்சிகள் பேசி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வார்டுகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பல நகராட்சிகள், மாநகராட்சிகளில் மிகக் குறைவாக வார்டுகள் ஒதுக்கப்படுவதாகவும் அதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கூட்டணி தொடர்பாக தமிழக முதல்வரும் திமுக  தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறுகையில், “திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மைனாரிட்டி பார்ட்னர் இல்லை. திமுக தலைவரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டபடும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார். மேலும் முத்தரசன் கூறுகையில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். வேட்புமனுத்தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்த இரு நாட்களுக்குள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!