உடைகிறது திமுக கூட்டணி..? கமல் ஹாசனுக்கு தூண்டில் போடும் காங்கிரஸ்..!

By Thiraviaraj RMFirst Published Jan 21, 2021, 11:41 AM IST
Highlights

புதுச்சேரியில் தி.மு.க தங்களது கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளதன் மூலம் தி.மு.க தனித்து போட்டி என்பதை உறுதிபடுத்தியுள்ளது. 

புதுச்சேரியில் தி.மு.க தங்களது கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளதன் மூலம் தி.மு.க தனித்து போட்டி என்பதை உறுதிபடுத்தியுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே தமிழகத்திலும், காங்கிரஸ் கட்சி தி.மு.கவை தவிர்த்துவிட்டு இதர கட்சிகளுடன் கூட்டணி அமைத்து  போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழக சட்ட பேரவை தேர்தலுடன், புதுச்சேரி சட்ட மன்றத்திற்கான தேர்தலும் நடைபெறுகிறது. 2006 சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 30 இடங்களை கொண்ட புதுச்சேரி சட்ட மன்றத்தில் காங்கிரஸ் கட்சி  15 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது, தனித்து போட்டியிட்டால் மட்டுமே தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நோக்கத்தில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு தேர்தலை சந்திக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளராக தி.மு.க களம் இறக்கியுள்ளது. புதுவையில்  நடந்த தி.மு.க தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜெகத்ரட்சகன் 30 தொகுதிகளையும் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்கும். அப்படி இல்லாவிட்டால் இந்த மேடையிலே எனது உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

முதல்வர் வேட்பாளரை அறிவித்தன் மூலம் காங்கிரஸை தி.மு.க கழற்றி விட்டுள்ளது. இதனால், கடுப்படைந்துள்ள காங்கிரஸ் கட்சியினர், தாங்களும் தனித்து போட்டியிட தயார் என்று பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி புதுவையில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட தயாராகவே இருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே காங்கிரஸ் - தி.மு.கவிடையே புதுவையில் ஏற்பட்ட கூட்டணி முறிவு, தமிழகத்திலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.கவை கழற்றிவிட்டு இதர கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி, கமலின் மக்கள் நீதி மையத்தை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏதும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க 200 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவித்து வரும் நிலையில், தொகுதி பங்கீட்டில் தங்களுக்கு போதிய இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறவு முறியும் தருவாயில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிகின்றனர். 

click me!