காங்கிரஸ் தலைமையில் 3வது அணி..! ராகுல் காந்தி பிரச்சாரம்..! திமுகவிற்கு ஷாக் கொடுத்த கே.எஸ்.அழகிரி..!

By Selva KathirFirst Published Jan 21, 2021, 10:49 AM IST
Highlights

புதுச்சேரியில் தனித்து போட்டியிடவும் காங்கிரஸ் தயார் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளது தமிழகத்திற்கும் சேர்த்து தான் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் திமுக யோசிக்க ஆரம்பித்துள்ளது.

புதுச்சேரியில் தனித்து போட்டியிடவும் காங்கிரஸ் தயார் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளது தமிழகத்திற்கும் சேர்த்து தான் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் திமுக யோசிக்க ஆரம்பித்துள்ளது.

கூட்டணி கட்சிகளை ஜெயலலிதா பாணியில் மு.க.ஸ்டாலின் டீலிங் செய்து வருவது அனைவரும் அறிந்தஒன்று தான். கலைஞர் கூட்டணியில் நீடிக்கும் காலம், திமுகவிற்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் எடுத்த நிலைப்பாடு இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வார். நீண்ட நாட்கள் கூட்டணியில் இருக்கிறார்கள் என்கிற காரணத்திற்காகவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு கடந்த முறை 5 தொகுதிகளை கலைஞர் கொடுத்திருந்தார். ஆனால் ஜெயலலிதா ஒரு போதும் கூட்டணி கட்சிகளுக்கு பாவம் பார்த்தது இல்லை.

2006, 2009 தேர்தலில் தங்களுடன் கூட்டணியில் இருந்த வைகோவின் மதிமுகவை, தேமுதிக வருகிறது என்பதற்காக அடித்து விரட்டியவர் ஜெயலலிதா. இதே போல் 2009, 2011ல் கூட்டணியில் இருந்து இடதுசாரிக்கட்சிகளை 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கூட கொடுக்க முடியாது என விரட்டினார் ஜெயலலிதா. இப்படி அதிமுகவிற்கு தேவை என்றால் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு இல்லை என்றால் யோசிக்காமல் விரட்டி விடு என்பது தான் ஜெயலலிதா பாணி. தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அதே நிலைப்பாட்டில் தான் இருப்பதாக கூறுகிறார்கள்.

நம்முடன் பல வருடங்களாக இருக்கிறார்கள் என்பதற்காக எந்த கட்சிக்கும் தொகுதிகள் கிடையாது, அவர்களின் பலம் என்ன, பலவீனம் என்ன? என்பனவற்றை எல்லாம் ஆராய்ந்து தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதில் திமுக தலைமை மிக உறுதியாக இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி என்றால் எந்த கூட்டணியில் இருந்தாலும் 40 முதல் 50 தொகுதிகள் உறுதி. இதே போல் விசிக என்றால் 10 தொகுதிகள், இடதுசாரிகள் என்றால் தலா 10 முதல் 12 தொகுதிகள் என்கிற நிலை தமிழகத்தில் உள்ளது. ஆனால் இவற்றை அப்படியே ஒட்டு மொத்தமாக மாற்ற திமுக முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 20 தொகுதிகள் தான் என்பதில் திமுக மிகவும் பிடிவாதமாக உள்ளது. அதோடு புதுச்சேரியிலும் காங்கிரசுக்கு அல்வா கொடுத்துவிட்டு தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைக்க திமுக வியூகம் வகுத்து வருகிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் திமுகவிற்கு சாதகமான அலை வீசுவதாக மு.க.ஸ்டாலின் கருதுவது தான். 10 ஆண்டு கால அதிமுக அரசு மீதான வெறுப்பு திமுகவிற்கு வெற்றியை தேடித்தரும் என்று ஸ்டாலின் நம்புகிறார். எனவே கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டியதில்லை என்றும் அவர் கருதுகிறார். இதனால் தான் காங்கிரசுக்கு வெறும் 20 தொகுதிகள் என்று பேச்சுவார்த்தையின் போது வெளிப்படையாகவே திமுக தரப்பு கூறி வருகிறது.

இந்த நிலை மாறும் என்று கடந்த வாரம் வரை கே.எஸ்.அழகிரி காத்திருந்தார். ஆனால் புதுச்சேரியில் திமுக போட்ட கூட்டம் அழகிரியை எரிச்சல் அடைய வைத்துள்ளது. கூட்டணி பேரத்தில் திமுக இப்படி பிடிவாதம் காட்டினால் சுயமரியாதையை இழந்து அவர்களுடன் செல்ல வேண்டியதில்லை என்கிற முடிவிற்கு அழகிரி வந்துள்ளதாக கூறுகிறார்கள். அண்மையில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் ராகுல் காந்திக்கு நல்ல வரவேற்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே ராகுலை பிரச்சாரத்திற்கு அழைத்து வந்து காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கவும் தயாராக உள்ளதாக கே.எஸ்.அழகிரி தற்போது பேச ஆரம்பித்துள்ளார்.

கமல், விசிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் மூன்றாவத அணி பலம் பெறும் என்றும் அழகிரி நம்புகிறார். திமுக தொடர்ந்து கூட்டணி கட்சிகளிடம் கறார் காட்டினால் 3வது அணியை அமைக்க ஆரம்பிக்கலாம் என்று காங்கிரஸ் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது. இதனை அறிந்து திமுக தலைமை அதிர்ச்சியில் உள்ளதாக கூறுகிறார்கள். கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு காரணமே விஜயகாந்த் தலைமையில் உருவான 3வது அணி தான். எனவே இந்த முறையும் அப்படி ஒரு அணி உருவானால் என்ன ஆகும் என்று திமுக யோசிக்க ஆரம்பித்துள்ளது.

click me!