உள்ளாட்சித் தேர்தல்: நீடிக்கும் இழுபறி... வேட்புமனு தாக்கலுக்கு பிறகும் பேச்சுவார்த்தை நடத்த திமுக, அதிமுக முடிவு!

By Asianet TamilFirst Published Dec 16, 2019, 7:14 AM IST
Highlights

வார்டுகள் பிரிக்கப்படாத மாவட்டங்களில் பேச்சுவார்த்தை நீடிக்கும்பட்சத்தில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் வேட்புமனுத் தாக்கல் செய்ய திமுக, அதிமுக என இரு கூட்டணியிலும் முடிவெடுத்துள்ளன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 19 அன்றுதான் கடைசி நாள் என்பதால், அதற்குள் பேசி முடிவு செய்துகொள்ளவும் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்கு பிறகு மனுக்களை வாபஸ் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைய உள்ள நிலையில், பேச்சுவார்த்தை நிறைவடையாத மாவட்டங்களில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக, அதிமுக முடிவெடுக்கப்பட்டுள்ளன.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 1.60 லட்சம் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் இன்னும் வேட்பு மனு தாக்கல் தாக்கல் செய்யப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் பங்கீடுகளை அரசியல் கட்சிகள் இன்னும் நிறைவு செய்யாமல் இருப்பதே இதற்குக் காரணம்.

 
ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, தமாகா, பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே பங்கீடுகள் ஓரளவுக்கு நடந்து முடிந்துவிட்டன. அந்தந்த மாவட்டங்களில் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் அளவில் இந்தப் பங்கீடுகள் நடந்து முடிந்துள்ளன. என்றாலும் வார்டுகளைப் பிரிப்பதில் சில மாவட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் சில இடங்களில் பாஜக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதேபோல வட மாவட்டங்களில் பாமக, தேமுதிக போட்டியிடும் இடங்களில் சிக்கல் ஏற்படாமல் இருக்க அதிமுக சார்பில் பேசி சரிசெய்யப்பட்டு வருகின்றன. இன்னும் பேச்சுவார்த்தை முடிவடையாத இடங்களில்  இன்று காலைக்குள் பேச்சுவார்த்தை நிறைவு செய்யப்பட்டுவிடும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகள் அந்தந்த மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் பேச்சிவார்த்தை நடத்திவருகிறார்கள். திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை முடிந்து இடங்கள் அறிவிக்கப்படும்போது, வேட்பாளர் பட்டியலுடனேயே அது வெளியிடப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. மற்ற கட்சிகளுக்கும் குறிப்பிட்ட அளவில் இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. என்றாலும் பல இடங்களில் அதிருப்திகளும் வெளிப்பட்டுவருகின்றன. வார்டுகளை பல கட்சிகளும் கேட்கும்போது, அங்கு சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. இன்று மதியத்துக்குள் இந்தப் பிரச்னைகள் களையப்பட்டு வார்டுகள் பிரிக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


வார்டுகள் பிரிக்கப்படாத மாவட்டங்களில் பேச்சுவார்த்தை நீடிக்கும்பட்சத்தில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் வேட்புமனுத் தாக்கல் செய்ய திமுக, அதிமுக என இரு கூட்டணியிலும் முடிவெடுத்துள்ளன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 19 அன்றுதான் கடைசி நாள் என்பதால், அதற்குள் பேசி முடிவு செய்துகொள்ளவும் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்கு பிறகு மனுக்களை வாபஸ் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. அமமுக, நாம் தமிழர் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

click me!