
“முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன், அதில் இரண்டு குளம் பாழ், ஒண்ணுல தண்ணியே இல்லை”, என்பதுபோல அ.தி.மு.க. அரசின் நீட் பயிற்சி மையங்கள் தள்ளாடுகின்றன என திமுக செய்யல தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமநிலையிலான வாய்ப்புகளை உருவாக்கி, அதனடிப்படையில் நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுகிறவர்களில் இருந்து தகுதியானவர்களை அடையாளம் காண்பதே சமூகநீதியின் இலக்கணம். சமநிலையிலான வாய்ப்புகள் (Level Playing Field) இல்லாத ஏற்றத்தாழ்வானப் போட்டிகளின் களமாக இருக்கிறது மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு. மத்திய அரசின் கல்வி வாரியத்தின்கீழ் (சி.பி.எஸ்.இ.) நீட் தேர்வு நடைபெறுகிறது என்பதிலிருந்தே, மாநில அரசின் கல்வித் திட்டம் இரண்டாம்பட்சமாகக் கருதப்படுகிறது என்பதை உணரமுடியும்.
அதனால்தான், மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்து 1170 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழகத்தின் கிராமப்புற - ஒடுக்கப்பட்ட சமுதாயத்து ஏழை மாணவி அனிதாவின் மருத்துவக் கனவு நிறைவேறாமல், நீட் தேர்வு எனும் சுருக்குக் கயிற்றால் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இன்னொரு அனிதா பலியாகி விடக்கூடாது என்ற அக்கறையுடன் நீட் எனும் பாரபட்சமான போட்டித்தேர்வு முறையை தி.மு.கழகம் தனது தோழமைச் சக்திகளுடன் இணைந்து, தொடர்ந்து எதிர்த்துக் களம் கண்டு வருகிறது.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பதே நமது முதன்மையான நோக்கம். மருத்துவப் படிப்பிலும், மருத்துவ சிகிச்சையிலும் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ள நிலையில், நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்படுவதால், தமிழ்நாட்டுக்கு இந்த நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். இதற்காக, தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் மத்திய அரசின் அலட்சியத்தால், தூங்கிக் கொண்டிருக்கின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் உள்பட பலவற்றிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, நீட் தேர்வு விவகாரத்திலும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கோரிக்கையைப் புறந்தள்ளி, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வை எழுதாமல் மருத்துவப் படிப்பில் சேரமுடியாது என்ற நிலையால், பெரும் செலவிட்டு பெறக்கூடிய நீட் பயிற்சி வகுப்புகளை நோக்கி மாணவர்கள் தள்ளப்படும் சூழல் உருவாகிறது. லட்சக்கணக்கில் செலவாகின்ற காரணத்தாலும், பெருநகரங்களில் மட்டுமே தனியார் நீட் பயிற்சி வகுப்புகள் கிடைப்பதாலும், கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்படுகிறது.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டிய ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசாங்கமோ, நீட் தேர்வுக்கான அரசு பயிற்சி மையங்களை உருவாக்குவதாக அறிவித்து, அதில் பாதி இடங்களில் கூட நீட் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படவில்லை. “இந்தப் பயிற்சி மையங்கள் நீட் தேர்வை தமிழக ஏழை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் இல்லை”, என கல்வியாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். “முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன், அதில் இரண்டு குளம் பாழ், ஒண்ணுல தண்ணியே இல்லை”, என்பதுபோல அ.தி.மு.க. அரசின் நீட் பயிற்சி மையங்கள் தள்ளாடுகின்றன.
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் தங்கள் வசதிக்கு மீறி நீட் பயிற்சி வகுப்புகளுக்கு செலவழிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளன. போட்டித் தேர்வுகளை அனைத்து மாணவர்களும் எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்கான பாடத்திட்டம், கட்டமைப்பு வசதிகள், பயிற்சி ஆகியவற்றுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு காலமாவது தேவைப்படும் என கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதை கவனத்தில் கொள்ளாமல் அ.தி.மு.க. அரசு அவசர கோலத்தில் அள்ளித் தெளிப்பதுபோல, மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் தி.மு.கழக ஆட்சியில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 50% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், நீட் தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை என மருத்துவ மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது. இப்படி பலவகையிலும் சமூகநீதியை சிதைக்கின்ற நீட் தேர்வு எனும் கொடுங்கரத்தால் தமிழக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இவையெல்லாம் போதாதென்று, மாணவர்களை மேலும் கொடுமைப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ளோருக்கு வெளி மாநிலங்களில் உள்ள நீட் தேர்வு மையங்களில் தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படுகிறது. முன்பின் தெரியாத இடம், மொழிச் சிக்கல், அறிமுகமில்லாத சூழல் எனப் பல தடைகளுடன் இளம்வயது மாணவ - மாணவியரை நீட் தேர்வு எழுத வைப்பது என்பது, அவர்களின் மனநிலை மீதான வன்முறை தாக்குதலாகும். தமிழ்நாட்டு மாணவர்கள் மீது மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்தத் திட்டமிட்ட தாக்குதல் குறித்து மாநில ஆட்சியாளர்கள் வாய் திறக்காமல் வழக்கம்போல மவுனம் காத்து வருகிறார்கள்.
இப்படி, வெளிமாநில தேர்வு மையங்களுக்கு தமிழக மாணவர்கள் அனுப்பப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்.
பாடத்திட்டம், பயிற்சி முறை, கட்டமைப்பு வசதிகள் என அனைத்திலும் சமநிலையிலான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான கால அவகாசத்தை வழங்காமல், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் தேர்வைத் தொடர்ந்து திணிப்பது என்பது சமூகநீதிக்கு மட்டுமில்லாமல், இயற்கை நீதிக்கும் எதிரானது. இளம் வயதினரான மாணவ சமுதயாத்தினர் மீதான இத்தகைய தாக்குதல், நமது அரசியல் சாசனத்திற்கும் எதிரானதாகும்.
எனவே, மத்திய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் எந்தப் பிடிவாதமும் காட்டாமல், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவினை குடியரசு தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும். எதிர் கட்சிகள் ஒத்துழைப்புடன் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அ.தி.மு.க. அரசு, நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை விடுவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.அரசியல் சாசனத்திற்கும், இயற்கை நீதிக்கும் புறம்பாக இளம்வயது மாணவ - மாணவியர் மீது மனரீதியான தாக்குதலை நடத்தி, சமூகநீதியை சிதைக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தி.மு.கழகத்தின் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு கூறியுள்ளார்.