
சிபிஐ ரெய்டு, வருமானவரித்துறை ரெய்டு, அமலாக்கத்துறை ரெய்டு போன்றவற்றிற்கு அஞ்சித்தான் பாஜக அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளரை அதிமுக ஆதரிக்கிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளராக போட்டியிடும் மீராகுமாருக்கு திமுக ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அவர் வெற்றிபெற வாழ்த்துவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் மீராகுமாரை ஆதரிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
பாஜக பொது வேட்பாளரை நிறுத்துவதாக கூறிவிட்டு எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்து நாடகமாடியுள்ளது என அவர் குற்றம்சாட்டினார்.
பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், கருணாநிதிக்காகத்தான் வைர விழாவில் கலந்து கொள்ள வந்தார் என்றும் தற்போது அவர் பாஜக ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது அவரது சொந்த விருப்பம் என்றும் தெரிவித்தார்.
வைரவிழா கருணாநிதிக்காக நடத்தப்பட்டது தான் என்றும், அந்த விழா குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக நடத்தப்பட்டதல்ல என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.