ஆ.ராசாவுக்கு செக்...! தேர்தலில் கவிழ்க்க தயாராகும் தி.மு.க. நிர்வாகிகள்?

By vinoth kumarFirst Published Oct 30, 2018, 4:35 PM IST
Highlights

ஆ.ராசாவுக்கே நீலகிரியில் சீட் என்கிறார்கள். ஜெயலலிதா இல்லாத நிலையிலும், அ.தி.மு.க. மீது மக்கள் ஏக அதிருப்தியில் இருக்கிறார்கள் எனும் பேச்சு இருக்கும் நிலையிலும் மிக தெம்பாக நீலகிரியில் போய் இறங்கப் போகிறாராம்.

கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலின் மூலம் பொது தொகுதி அந்தஸ்தில் இருந்து தனி தொகுதியாக மாறியது நீலகிரி தொகுதி. தன் சொந்த மாவட்டமான பெரம்பலூரை விட்டு வெளியேறி முதல் முறையாக அங்கே வந்து நின்றார் ஆ.ராசா. 

அ.தி.மு.க.வுக்கு செம்ம குஷி. காரணம், இந்த மண்டலத்தையே சேராத ராசாவை நீலகிரி  நாடாளுமன்ற மக்கள் நடு மண்டையில் குட்டி அனுப்பி வைத்துவிடுவார்கள் எனும் எண்ணம்தான். ஆனால் தாறுமாறான வாக்குகளுடன் ஜெயித்து வந்து நின்றார் ராசா. அவர் மீது நீலகிரி மலைமாவட்ட மக்கள் காட்டிய பாசம் அசாதாரணமானது. பதிலுக்கு அவரும் தொகுதிக்கு அள்ளிக் கொடுத்தார். 

2ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையினுள் இருந்த போதும் கூட தன் தொகுதி மக்கள் சிலரின் மருத்துவ செலவுகளுக்காக பிரதமர் நிதியிலிருந்து பணம் வாங்கிக் கொடுத்து சதாய்த்தார்.  2014ல் அடுத்த தேர்தல் வந்தது. புது முகமா இருக்குறப்பவே ஜெயிச்சோம், இப்ப ஜெயிக்க மாட்டோமா? என்று சற்றே கவனக்குறைவாக இருந்தார். கூடவே ஜெயலலிதாவின் பிரசார அலை வேறு ஒட்டுமொத்தமாய் 39  தொகுதிகளையும் வளைத்துக் கட்டி அடித்தது. விளைவு, அ.தி.மு.க.வின் வேட்பாளர் கோபாலகிருஷ்ணனிடம் அநியாயமாய் தோற்றார் ராசா. 

இந்நிலையில் இப்போது மீண்டும் தேர்தல் நெருங்குகிறது, மீண்டும் அதே ஆ.ராசாவுக்கே நீலகிரியில் சீட் என்கிறார்கள். ஜெயலலிதா இல்லாத நிலையிலும், அ.தி.மு.க. மீது மக்கள் ஏக அதிருப்தியில் இருக்கிறார்கள் எனும் பேச்சு இருக்கும் நிலையிலும் மிக தெம்பாக நீலகிரியில் போய் இறங்கப் போகிறாராம். அப்போ செம்ம கூலா ஜெயிச்சுடுவார்னு சொல்லுங்க!...என்றால் அதுதான் இல்லை என்று தகவல் வருகிறது. 

காரணம்? ஆ.ராசாவின் வெற்றிக்கு இந்த முறை அவரது சொந்த கட்சியினரான தி.மு.க.வினரே வேட்டு வைக்க திட்டம் போட்டுள்ளார்கள்! என்று தகவல். காரணம்? பெரம்பலூரில் இருந்து தாவி வந்த ஆ.ராசா ஏதோ ஜெயித்தோம், தோற்றோம் என்றில்லாமல் முழுக்க முழுக்க கொங்கு மண்டலத்தை தன் கையில் எடுத்து வைத்து ராஜாங்கம் செய்கிறாராம். 

கொங்கு மண்டலத்தின் பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஸ்டாலினை சந்திக்க வேண்டுமென்றால் ஆ.ராசாவை தாண்டித்தான் போக வேண்டி இருக்கிறதாம். தன்னை கொங்கு மண்டல தி.மு.க. தளபதியாகவே ராசா நினைத்து செயல்படுவாத அந்த மண்டல தி.மு.க. நிர்வாகிகள் ஆதங்கப்படுவதால் ராசாவுக்கு செக் வைக்க முடிவு செய்துவிட்டார்கள்! என்று தகவல்.

click me!