வாஷ் அவுட் தே.மு.தி.க.! வாயால் கெட்ட ஜெயக்குமார்: லோக்சபா பரிதாபங்கள்...

By sathish kFirst Published May 23, 2019, 4:17 PM IST
Highlights

தவளை மட்டுமில்லை தலைவர்களும் தங்கள் வாயாலேயே கெடுவார்கள் என்பதை இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நறுக்கென்று, உச்சந்தலையில் நச்சுன்னு சுத்தியலால் அடித்து நிரூபித்திருக்கின்றன. 

தவளை மட்டுமில்லை தலைவர்களும் தங்கள் வாயாலேயே கெடுவார்கள் என்பதை இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நறுக்கென்று, உச்சந்தலையில் நச்சுன்னு சுத்தியலால் அடித்து நிரூபித்திருக்கின்றன. 

பேசிப்பேசியே வளர்ந்தவைதான் திராவிட கட்சிகள். ஆனால் பேசும் பேச்சு ஜனரஞ்சகமானதாகவும், ஜனங்கள் ஜீரணித்துக் கொள்ளக் கூடியதாகவும் இருத்தல் அவசியம். ஆனால் அந்த எல்லைகளை தாண்டிப் பேசி, மக்களின் எரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்ட வகையில் இரண்டு தலைவர்களின்  குடும்ப தோல்வியானது தமிழர்களை நகைக்க வைத்துள்ளது.

ஒன்று.... வாஷ் அவுட் ஆன தே.மு.தி.க. தேர்தல் வைபரேஷன் துவங்கும் முன், விஜயகாந்த் - பிரேமலதா இருவரும் அமெரிக்காவில் இருந்தபோது, வேறு வழியில்லாமல் அரசியல் மேடைக்கு ஏறிய அவர்களின் மூத்த மகன் விஜய் பிரபாகரன், தான் தோண்றித்தனமாகவும், தாறுமாறாகவும், கட்டுப்பாடுகள் இல்லாமலும் மிக மோசமான வார்த்தைப் பிரயோகத்தில் பேசினார். 

விஜயகாந்த் சென்னை திரும்பிய பின்னும் விஜய் பிரபாகரனின் பேச்சு வழக்குகள் சரியில்லை. ஆளும், எதிர்கட்சி என இரண்டையும் வாய்க்கு வந்தபடி பேசினார். இதை இரண்டு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் எதிர்த்த பின் சற்றே அடங்கினார். ஆனால், அதற்கு பதிலாக மைக் பிடித்த பிரேமலதாவோ தன் பங்குக்கு எகிறி குதித்தா. இத்தனைக்கும் ஒரு எம்.எல்.ஏ.வோ, ஒரு எம்.பி.யோ கூட இல்லாத நிலையில் இந்த கட்சியின் நிர்வாகமும், கட்சியினரும் ஆடிய ஆட்டத்துக்கு மிக மிக வலுவான தண்டனையை கொடுத்திருக்கின்றனர் மக்கள். ஆம் நின்ற ஐந்து தொகுதிகளிலும் மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது தே.மு.தி.க. மத்தியமைச்சர் கனவில் இருந்த சுதீஷால், எம்.பி.யாக கூட ஆக முடியவில்லை பாவம். 

இதேபோல் வாயால் கெட்ட இன்னொருவர் அமைச்சர் ஜெயக்குமார். இவர் தன் அதீத நக்கல் பேச்சினாலும், கர்வ பேச்சினாலும் தன் மகனது வெற்றிக்கு தானே எமனாகிவிட்டார். தி.மு.க.வினரையும், தினகரனையும், இன்னபிற எதிர்கட்சிகளையும், இவ்வளவு ஏன்....போராட்டத்தில் ஈடுபடும் தமிழகத்தில் பல துறை மக்களையும் மிக கேவலமாக விமர்சிப்பார். கடந்த இரண்டு வருடகாலமாகவே மக்களின் வயிற்றெரிச்சலில் இவர் விழுந்து வந்தார் என்றார்கள். அதன் பலனை இன்று அறுவடை செய்திருக்கிறார் ஜெயக்குமார்! என்று அ.தி.மு.க.வின் சீனியர்களே குறிப்பிடுகின்றனர். தேர்தல் அரசியலில் முதல் முறையாய் காலெடுத்து வைத்திருக்கும் தமிழச்சி தங்கபாண்டியனிடம் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கிறார் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன். 

இத்தனைக்கும், அமைச்சரின் மகன், தான் ஒரு எம்.பி. என்று எந்த பந்தாவுமில்லாமல், அமைதியின் சொரூபமாக இருந்தவர் ஜெயவர்தன். ஆனால் அப்பா செய்த பாவம் பிள்ளையை படுத்திவிட்டது. அய்யோ பாவம்ல! 
ஆதலினால் அரசியல்வாதிகளே நா காக்க!

click me!