திமுக தேர்தலில் வெற்றி பெற சிஏஏ-தான் காரணம்... அதிமுக-பாஜகவுக்கு எதிராக கொந்தளித்த தேமுதிக மா.செ.!

By Asianet TamilFirst Published Jan 6, 2020, 10:37 AM IST
Highlights

 திமுகவின் இந்த வெற்றிக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம்தான் காரணம். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நடந்தபோது மக்களின் மனநிலை, நம்முடைய கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. கூட்டணி கட்சிகளும் ஒருமனதாக களத்தில் இருந்தனர். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் ஒருங்கிணைப்பும் இல்லை, ஒற்றுமையும் இல்லை. இதை அதிமுக சரியாக செய்யவில்லை. 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வஞ்சிக்கப்பட்டுவிட்டதாக அக்கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக 20 சதவீத இடங்களை அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்தது. ஆனால், ஊரகப் பகுதிகளில் தேர்தல் நடந்த பகுதிகளில் அந்த அளவுக்கு தேமுதிகவுக்கு ஒதுக்கவில்லை என்ற வருத்தம் தேமுதிக தலைமைக்கு ஏற்கனவே இருந்தது. இதற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக தலைமை, இந்த முறை பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இந்நிலையில்  தேமுதிகவின் அதிருப்தியை விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடேசன் எதிரொலித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்த கூட்டத்தில் பேசிய  வெங்கடேசன், “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியைவிட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் இந்த வெற்றிக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம்தான் காரணம். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நடந்தபோது மக்களின் மனநிலை, நம்முடைய கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. கூட்டணி கட்சிகளும் ஒருமனதாக களத்தில் இருந்தனர்.
ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் ஒருங்கிணைப்பும் இல்லை, ஒற்றுமையும் இல்லை. இதை அதிமுக சரியாக செய்யவில்லை. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் உரிய இடத்தை தேமுதிகவுக்கு அதிமுக வழங்கவில்லை. கடலுார், தருமபுரி தவிர மற்ற மாவட்டங்களில் எல்லாம் தேமுதிகவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 27 மாவட்டங்களில் தேமுதிக வஞ்சிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் பலம் இன்னும் குறையவில்லை. தனித்து நின்றால் நம்முடைய ஓட்டு வங்கியை நிரூபிக்க முடியும். ஒரு வேளை தேவைப்பட்டால் அதற்கும் தயாராக உள்ளோம்” என்று வெங்கடேசன் பேசினார். 

click me!