வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க... மத்திய, மாநில அரசுகளை அலர்ட் செய்த விஜயகாந்த்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 11, 2021, 12:09 PM IST
Highlights

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார். 
 

இந்தியாவில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மட்டும் சற்றே குறைந்திருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது மீண்டும் மளமளவென உயர ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை எட்டியது வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 4ம் தேதி முதலே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல், 25 காசுகள் உயா்ந்து ரூ.97. 19-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு லிட்டா் டீசல் விலை, 27 காசுகள் உயா்ந்து ரூ.91.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படியே சென்றால் இன்னும் சில தினங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின்  விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதாக, மத்திய அரசு  கூறுவதை தற்போதைய சூழலில் ஏற்றுக்  கொள்ள முடியாது. மேலும், டில்லி, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துவிட்ட  நிலையில், தமிழகத்திலும் 100 ரூபாய் எட்டி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவ்வாறு விலை உயர்ந்தால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், வாகனங்களின் வாடகை கட்டணமும் மேலும் உயரம் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

click me!