
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் திமுக, அதிமுகவின் 3 அணிகள், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்பட 62 கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில், தேமுதிக சார்பில், மதிவாணன் தேர்தல் களத்தில் உள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு தேமுதிக சார்பில் களத்தில் இறங்கிய விஜயகாந்த், அவர் மட்டும் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து 2011ம் ஆண்டு, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்த்துக்கு முன்னேறினார்.
ஆனால், சில மாதங்களிலேயே கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுங்கட்சியை விமர்சித்தும், எதிர்த்தும் விஜயகாந்த் பேசி வந்தார். இதனால், அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில், தேமுதிக எம்எல்ஏக்கள் பலர், அதிமுகவுக்கு தாவினர்.
இதைதொடர்ந்து கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், மதிமுக பொது செயலாளர் வைகோ துவக்கி வைத்த மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் கூட்டணி வைத்தார்.
இதில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை இணைந்து 3 அணியாக உருவாகி தேர்தல் களத்தில் குதித்தன. ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகியது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில், தேமுதிக சார்பில், மாவட்ட செயலாளர் மதிவாணன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொண்டர்கள் பைக், ஆட்டோ மூலம் தொகுதி முழுவதும் வலம் வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
களத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் கட்சியின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதையொட்டி தேமுதிக வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து கட்சி தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டார். ஆனால் அவரது உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டதால் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து இன்று அவர், வீடு திரும்புகிறார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும், அவருக்கு பூரண ஓய்வு தேவை என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவது கஷ்டம் என தேமுதிகவினர் கூறுகின்றனர்.
அதனால் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் தனது வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று தொண்டர்கள் ஆவலுடன் எதிர் பார்த்த நிலையில் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதே வேளையில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.