கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் தவியாய் தவிக்கும் திமுக.. அதிமுக !! தேமுதிகவால் தொடரும் குழப்பம் !!

By Selvanayagam PFirst Published Feb 27, 2019, 9:30 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக திமுக, அதிமுக என இரண்டு சைடிலும் தேமுதிக பேசி வருவதால் அவர்கள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது தொண்டர்களும் கடுப்பாகியுள்ளனர். நான்கு கட்சிகளுடன், தேமுதிக பேச்சு நடத்துவதால், திமுக – அதிமுக  கூட்டணி முடிவாவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கட்டாய வெற்றியை எதிர்நோக்கி, காய் நகர்த்த வேண்டிய நெருக்கடியில், தேமுதிக உள்ளது. இத்தேர்தலில், அதிமுக – பாஜக  கூட்டணியில் இணைவதற்கு, தேமுதிக களம் இறங்கியது.  ஆனால் அந்த கட்சி  நேரடியாக அதிமுகவை அணுகாமல் பாஜக வழியாக கூட்டணிக்குள் இணைய முயற்சி செய்து வருகிறது.

ஆனால் அதிமுக  பா.ம.க., - பா.ஜ.,வுடன் மட்டும், கூட்டணியை முடிவு செய்து, தொகுதி ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்த பாமகவைவிட  கூடுதல் தொகுதிகளை, தே.மு.தி.க., கேட்டு வருகிறது.

இதற்காக, பா.ஜ., தலைவர்கள்  வாயிலாக மட்டுமின்றி, அ.தி.மு.க., அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணியுடனும், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், நேரடி பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார். இது, ஒருபுறம் இருக்க, விஜயகாந்த் உடல்நலம் விசாரிக்க வந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும்,கூட்டணிக்கு துாது விட்டு சென்றுள்ளார்.

ஏற்கனவே, பல கட்சிகள் உள்ளதால், தி.மு.க., கூட்டணியில், குறைந்த தொகுதிகளே, தே.மு.தி.க.,விற்கு கிடைக்கும் என, கூறப்படுகிறது. எனவே, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து, இரண்டை திரும்ப பெற்று தருமாறு, தே.மு.தி.க., தலைமை எதிர்பார்க்கிறது.

இதற்காக,காங்கிரஸ் தலைவர்களிடம், சுதீஷ் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார்.இவ்வாறு, இரண்டு கூட்டணிகளில், ஏதாவது ஒன்றில் சேர்வதற்காக, நான்கு கட்சிகளிடமும், தே.மு.தி.க., பேச்சை தொடர்ந்து வருகிறது. இதனால், தே.மு.தி.க., எந்த அணியில் சேரும் என்ற, அரசியல் எதிர்பார்ப்பு தொடர்கிறது.

அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளில், இழுபறி நீடிப்பதற்கு, தே.மு.தி.க.,வே காரணமாக இருந்து வருகிறது. கடந்த 2014 லோக்சபா, 2016 சட்டசபை தேர்தல்களின் போதும், இதேபோன்று, விஜயகாந்த், கூட்டணியை தாமதப்படுத்தியதால், அவர் அரசியல் பேரம் நடத்துவதாக புகார் எழுந்தது.

இது, மக்கள் மத்தியில், தே.மு.தி.க.,வினருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.தற்போதும், கூட்டணியை முடிவு செய்யாமல், காலம் தாழ்த்துவது, கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கவலைஅடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் தேமுதிக தனித்து போட்டியிலாத் என்ற யோசனையும் சரிபட்டு வரவில்லை. ஏனென்றால் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் கூட மிகக் குறைந்த அளவே வந்துள்ளன. இதையடுத்து தேமுதிகவும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

click me!