ஸ்டாலின் பேச்சைக் கேட்பது ஆளுங்கட்சிக்குக் கவுரவக் குறைச்சலா..? முதல்வர் எடப்பாடி மீது கி.வீரமணி அட்டாக்!

By Asianet TamilFirst Published Apr 18, 2020, 9:04 PM IST
Highlights

போர் நடத்துகிறோம் என்று கூறும் எந்த முதலமைச்சரும் எந்த காலகட்டத்திலும் அனைத்துக் கட்சிகள், அமைப்புகளைக் கூட்டி ஓர் அணியாக, ஒத்தக் குரலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுதான் கடந்த கால அரசியல் வரலாறு. இது ஜனநாயகம் - மக்களாட்சி அரசு. இதில் முதலமைச்சருக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு அனைத்து மக்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மிகுந்த கவலையும், பொறுப்பும் உண்டு. தி.மு.கவின் தலைவர் மு.க.ஸ்டாலின் யாரோ ஒரு தனி நபர் அல்ல; பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனநாயகத்தில், ஆளும் அரசுக்கு மாற்றானது - எதிர்க்கட்சி என்பது அரசியல் பாலபாடம்.
 

எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை உடனே ஏற்றால், அது ஆளுங்கட்சிக்குக் கவுரவக் குறைவு என்பதுபோல் தவறான ஒரு மயக்கத்தில் - தன்முனைப்பில் பேசலாமா என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகளையே வதைத்துக் கொண்டும், வரலாறு காணாத உயிர்ப் பலிகளை ‘காவு’ வாங்கிக் கொண்டும் உள்ள கொரோனா கொடூரம் நம் நாட்டில் - இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் நாளும் எண்ணிக்கை கூடுகிறது. இது கண்ணுக்குத் தெரியாத தொற்று நோய்க் கிருமிகளுடன் உலகத்தாரால் நடத்தப்படும் ஒரு பெரும் போர் என்பதைச் சொல்லாதவர்களே இல்லை.
தொடக்கம் முதலே முதலமைச்சர் எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்? போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்புப் பணிகள், நிவாரணப் பணிகள் முழு வீச்சில் வேகமாக நடைபெறவேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தொடக்கம் முதலே இந்நோய்ப்பற்றி கூறிய கருத்துகள் பல. ‘‘பணக்காரர்களுக்கே வரும் நோய் இது!’’ ‘‘மற்றவர்களைக் கலந்து ஆலோசிக்க இதில் என்னவிருக்கிறது?’’‘‘இது மருத்துவர்களைப் பொறுத்த பிரச்னை!’’ இதுபோல, பல கருத்துகள் - அதிகம் எழுத இது நேரம் அல்ல; ஒத்துழைப்பு ஓங்கவேண்டிய பருவம் இது!

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்குப் பதில் கூறவேண்டிய அவசியம் இல்லையாம்! நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடையே பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல செய்திகளைக் கூறிவிட்டு, ‘‘தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகிறோம். இதனால் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை அரசு பொருட்படுத்தவில்லை. அவருக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமே கிடையாது. உயிரோடு விளையாடுவது எல்லாம் சரியல்ல. எதிர்க்கட்சித் தலைவர்கள் என்றால், பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும். தினந்தோறும் ஏதாவது அறிக்கை விடுவது இந்த அரசைக் குற்றம் சொல்வது - இந்த நேரத்தில் குற்றம் சொல்லுகின்ற நேரமா இது? உயிர் காக்கவேண்டிய நேரம். அதைக் காப்பதற்கு வழிமுறை சொன்னால் நல்லது’’ என்று கூறியுள்ளார்.
போர் நடத்துகிறோம் என்று கூறும் எந்த முதலமைச்சரும் எந்த காலகட்டத்திலும் அனைத்துக் கட்சிகள், அமைப்புகளைக் கூட்டி ஓர் அணியாக, ஒத்தக் குரலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுதான் கடந்த கால அரசியல் வரலாறு. இது ஜனநாயகம் - மக்களாட்சி அரசு. இதில் முதலமைச்சருக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு அனைத்து மக்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மிகுந்த கவலையும், பொறுப்பும் உண்டு. தி.மு.கவின் தலைவர் மு.க.ஸ்டாலின் யாரோ ஒரு தனி நபர் அல்ல; பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனநாயகத்தில், ஆளும் அரசுக்கு மாற்றானது - எதிர்க்கட்சி என்பது அரசியல் பாலபாடம்.
அதனால்தான், எதிர்க்கட்சித் தலைவர் என்பது அமைச்சர் தகுதி படைத்த அரசுப் பதவி. அரசின் நடவடிக்கைகளை - ஓட்டைகளைச் சுட்டிக்காட்டி அறிக்கை விடுவதோ, விமர்சிப்பதோ எப்படி தவறு ஆகும்? அது அவரின் இன்றியமையாத கடமை! அது ஜனநாயகக் கடமை, அவர்மீது மக்கள் சுமத்தியிருக்கும் நீங்காத பொறுப்பு. அதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை உடனே ஏற்றால், அது ஆளுங்கட்சிக்குக் கவுரவக் குறைவு என்பதுபோல் தவறான ஒரு மயக்கத்தில் - தன்முனைப்பில் பேசலாமா? - முதலமைச்சர் முதலில் மறுப்பது - பிறகு சில நாள் கழித்து அதை செய்வதை மக்களால் மறந்துவிட முடியுமா?
சட்டமன்ற நடவடிக்கைகளைத் தள்ளி வைக்கச் சொன்னார்; மிக முக்கிய மானியக் கோரிக்கைகள் எல்லாம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன, எதிர்க்கட்சிகளே இல்லாமல்! எத்தனையோ கூறலாம் - பட்டியல் நீளும் - இந்த நேரம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய நேரம். கேரள முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரை பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு செய்தியாளர்களைச் சந்திப்பதைப் பார்த்தாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா?ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால்தானே கோரியது கிடைக்கும்! மத்திய அரசிடம், மாநில அரசு கேட்ட தொகையைக் கொடுக்கவேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஆதரித்து வலியுறுத்தினாரே! 
அதையே அனைத்துக் கட்சியினரும் இணைந்து, தமிழ்நாடு இதில் கட்சி, கருத்து மாறுபாடின்றி ஒருங்கிணைந்து மத்திய அரசுக்குக் குரல் கொடுத்திருந்தால், எதிர்பார்த்தவை நடந்திருக்கும். ஒரு லட்சம் ராபிட் டெஸ்ட் கிட் ஆர்டர் கொடுத்தது குறிப்பிட்ட தேதியில் கிடைக்காதது மட்டுமல்ல, இப்போது மத்திய அரசிடம் மீண்டும் பரிசோதனைக் கருவிகளுக்கு மனு போட்டு வலியுறுத்தும்போதும் சரி, நிதி உதவிகளைப் பெறுவதிலும், மாநிலம் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதன் வலிமையை யார்மூலம் காட்ட முடியும்? எதிர்க்கட்சித் தலைவர்மூலம் தானே! அதை உணர்ந்ததால்தானே பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசுகிறார்கள். நம் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் பதில் கூறவேண்டும் என்று கேட்பது எவ்வகையில் ஜனநாயகப் பண்பின்படி சரியானது?
ஒற்றுமையைக் கட்டிக் காக்கவேண்டும். பசித்தவர்களுக்கு உணவுப் பொட்டலம், உதவிகள் தருவதைக் கூட தடுத்து நிறுத்தவில்லையா? உயர்நீதிமன்றத் தீர்ப்பில், தமிழக முதலமைச்சரின் ஆணை வலிமையற்றதாக்கப்பட்ட நிலை தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் தேவைதானா? - மனிதாபிமான கண்ணோட்டத்தில் எதனையும் அணுகவேண்டாமா? தள்ளி நின்று விநியோகம் செய்யுங்கள் என்று முதலிலேயே கூறியிருந்தால், இந்த ஒரு இக்கட்டான நிலை தமிழக அரசுக்கு வந்திருக்குமா? எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டும் கூட்டத்திற்குக் கூடத் தடை என்பது, வெறும் கொரோனா பாதுகாப்புக் கண்ணோட்டத்திற்காகவா? மக்கள் அவ்வளவு புரிந்துகொள்ளாதவர்களா?என்றாலும், அக்கூட்டத்தின் அத்தனை தீர்மானங்களும், தமிழக அரசின் - மாநில அரசுகளின் உரிமைகளை வற்புறுத்திடும் - வலிமை சேர்க்கும் தீர்மானங்கள்தானே! அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்வதுதானே அரசியல் சாதுர்யம் ஆகும்?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் (குறள் 448). ‘‘தவறு கண்டவிடத்து கடிந்துரைத்து, அறிவுரைகளை வழங்கக் கூடிய பெரியோர்களின் துணையைப் பெறாத, பாதுகாவலற்ற ஒரு அரசனைக் கெடுக்கக் கூடிய பகைவர் என்று எவரும் இல்லாவிட்டாலும், அப்படிப்பட்ட ஒரு நிலையின் காரணமாகவே அவன் கெட்டொழிந்து போவான் என்பது உறுதி.’’ எனவே, இனியும் இதுபோன்ற பதில்களைக் கூறி, மக்களாட்சி மாண்புகளுக்கு மாறாக - அதுவும் இந்த ஒற்றுமை ஓங்கிக் கட்டப்பட்டு, இரு கை ஓசை மட்டுமல்ல; பல கை ஓசை தேவைப்படும் காலகட்டத்தில், முதலமைச்சர் இவ்வாறு எல்லாம் நடந்துகொள்வது அவருக்கும் நல்லதல்ல - ஜனநாயகத்தில் ஆரோக்கியமானதுமல்ல!” என்று வீரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!