டார்க்கெட்டா வைக்கிறீங்க.... இது நியாயமா... எடப்பாடிக்கு முட்டுகட்டை போடும் பொன். ராதா..!

By vinoth kumarFirst Published Oct 22, 2019, 1:25 PM IST
Highlights

தீபாவளி பண்டிகையை மது இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும். ஆகையால், தீபாவளிக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை மது இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும். ஆகையால், தீபாவளிக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். 

தஞ்சாவூரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா சமூக விழிப்புணர்வு பாத யாத்திரையில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை எந்த அரசு செய்தாலும் ஏற்க முடியாது.

தமிழ்நாடு முழுவதும் தீபாவளியை மதுவற்ற தீபாவளியாகக் கொண்டாட வேண்டும் என்பது எனது கருத்து. எந்த வீட்டிலும் எவ்வித பிரச்சனையும் இருக்கக்கூடாது. மது மதிமயக்கத்தைக் கொடுக்கிறது. சம்பாதிக்கும் பணத்தை அழிக்கக்கூடிய ஒரு நாசக்கார சக்தியாக மது இருக்கிறது. எனவே, மதுவில்லாத தீபாவளியாக, மது அருந்தாத தீபாவளியாக இந்த தீபாவளி கொண்டாடப்பட வேண்டும்.

தமிழகத்தை மதுவற்ற மாநிலமாகவும், மது அருந்தாத தமிழனாகவும் காண வேண்டும் என விரும்புகிறேன். இதன் முதல் தொடக்கமாக, காந்தியின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் வரும் தீபாவளியன்று எக்காரணத்தைக் கொண்டும் மதுவைத் தொடாமல், நண்பர்களுடன், உறவினர்களுடன் குதூகலமாக இருக்க வேண்டும். தீபாவளியன்று மது பழக்கம் மறையட்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மது குடித்தால் தீபாவளியைக் கொண்டாட முடியாது. அதனால் மகிழ்ச்சியும் இல்லை. மதுவால் எத்தனையோ குடும்பங்கள் கதறிக் கொண்டிருக்கின்றன. இது மிக மோசமான செயல். எக்காரணத்தைக் கொண்டும் தீபாவளிநாளன்றும், அதற்கு முந்தைய நாளும் டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கக் கூடாது. தீபாவளி நாளில் மதுக்கடைகளைத் திறந்து வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதேபோல் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பண்டிகையையும் மது இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும். எனவே மக்களும் மதுவை புறக்கணிக்க வேண்டும். மது, மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயம். தேவைப்படும்போது இந்தியா முழுவதும் மதுவிலக்கை மத்திய அரசு கொண்டு வர நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

click me!