
டி.டி.வி.தினகரனுக்கு எதிராக சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் இன்று அம்ம அணி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது. ஆனால் இதில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார்.
இதையடுத்து தினகரன் –திவாகரன் இடையே வெளிப்படையாக மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். இதையடுத்து தான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக திவாரன் அறிவித்தார்.
இந்நிலையில் மன்னார்குடியில் அம்மா அணி என்ற பெயரில் திவாகரன் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். மன்னார்குடியில் இன்று அக்கட்சிக்கான அலுவலகத்தைத் திறந்து வைத்த திவாகரன், அம்மா அணிக்கு புத்துயிர் ஊட்டப்போவதாக தெரிவித்தார்.
தனக்கு பல எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், தன்னுடைய கட்சியில் கட்டாயம் இணைய வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை எனவும் திவாகரன் தெரிவித்தார்.