
எந்தக் காரணத்தைக் கொண்டும் தென் இந்தியாவுக்குள் பாஜகவை நுழையவிடக்கூடாது என்றும், அவர்களை இங்கிருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்றும் குஜராத் மாநில எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில் கடுமையான பாஜகவின் எதிர்ப்பையும் மீறி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜிக்னேஷ் மேவானி, அம்மாநிலத்தில் பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். தற்போது கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கலக்கி வருகிறார். அவருடன் நடிகர் பிரகாஷ் ராஜும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பாஜகவை மக்களின் பிரச்சினையை தீர்க்க தேர்ந்தெடுத்தால் அவர்கள் தங்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். சொல்படி தான் பா.ஜனதா நடக்கிறது. மத்தியில் ஆட்சி செய்வது ஆர்.எஸ்.எஸ். தான். நாட்டின் நலனுக்காக அவர்கள் எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை. பா.ஜனதாவினர் பொய் கூறுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளனர். இவர்கள் எவ்வாறு மக்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள்?. நாட்டை எவ்வாறு காப்பாற்றுவார்கள்? என பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பேசிய ஜிக்னேஷ் மேவானி பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக கூறினார். அப்படி பார்த்தால், 4 ஆண்டுகளில் 8 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 4 ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பாஜக மக்களை ஏமாற்றி வருகிறது. நாட்டில் நடக்கும் பலாத்கார சம்பவங்களில் பாஜகவைச் சேர்ந்த பலர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்காக அதானி, அம்பானியிடம் இருந்து மோடி 80 சதவீதம் கமிஷன் வாங்கி உள்ளார். அவர் கமிஷனை பற்றி பேசலாமா?. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு நாம் வாய்ப்பு வழங்கக்கூடாது. ஏற்கனவே வாய்ப்பு கொடுத்ததால், என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல, எக்காரணத்தை கொண்டும் பாஜகவை தென்னிந்தியாவுக்குள் நுழைய விடக்கூடாது. அது உங்கள் கர்நாடக மக்களின் கையில் தான் உள்ளது என்றும் பேசினார்.