
அதிமுகவின் பொது செயலாளரான சசிகலா பெங்களூரு சிறையில் இருக்கிறார். துணை பொது செயலாளர் தினகரனோ, தமது அதிகாரத்தை நிலைநாட்ட கடுமையாக போராடிக்கொண்டு இருக்கிறார்.
இதுவரை 34 எம்.எல்.ஏ க்களை தம் பக்கம் இழுத்தாலும், எடப்பாடி கொஞ்சம் கூட இறங்கி வருவதாக இல்லை. அமைச்சர்களோ, வெளிப்படையாகவே தினகரனுக்கு எதிராக பேட்டி கொடுக்கின்றனர்.
இலைக்காக திஹார் சிறை சென்று திரும்பிய தம்மை அமைச்சர்கள் வந்து சந்திப்பார்கள் என்று தினகரன் எதிர்பார்த்தார். ஆனால் யாரும் அப்படி வந்து அவரை சந்திக்கவே இல்லை.
திண்டுக்கல் சீனுவாசன் மட்டும் எப்போதாவது தினகரனுக்கு ஆதரவாக கருத்து கூறுவார். தற்போது அதுவும் இல்லை. ஓ.எஸ்.மணியன், காமராஜ், விஜயபாஸ்கர் போன்ற தினகரன் ஆதரவு அமைச்சர்களும்
இதுவரை அவரை சந்திக்கவில்லை.
தமக்கு ஆதரவாக சேர்த்த எம்.எல்.ஏ க்கள் பலரையும் சந்தித்த எடப்பாடி, அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து சரிக்கட்டி விட்டார். தங்க தமிழ்ச்செல்வன் கூட அமைச்சர் பதவி கிடைக்காத ஆத்திரத்தில், முன்பு போல தீவிரமாக இல்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றி சசிகலாவிடம் எத்தனை முறை கூறினாலும், உங்கள் அதிகார யுத்தத்தை விட, எஞ்சிய நான்காண்டுகால ஆட்சியே முக்கியம், அதற்கு பங்கம் வந்துவிட கூடாது என்று சொல்லியே தினகரனை அடக்கி வைத்து விடுகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, அண்மையில் சசிகலாவை சந்தித்த திவாகரன், அணிகளை இணைத்தால் மட்டுமே, இரட்டை இல்லை சின்னத்தை சிக்கல் இன்றி பெறமுடியும் என்று கூறி இருக்கிறார்.
தினகரனை ஓரம் கட்டாமல், அணிகள் இணைப்பு சாத்தியமே இல்லை. மேலும், சிறையில் இருக்கும் உங்களையும் வெளியில் கொண்டு வர வேண்டியது மிகவும் முக்கியம்.
தினகரன் தன்னிச்சையாக நடந்து கொள்வது, ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன், டெல்லி மேலிடத்தின் கோபத்தையும் அதிகப்படுத்தி வருகிறது.
எனவே, தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்தால் மட்டுமே, எஞ்சிய நான்காண்டு கால ஆட்சியை சிக்கல் இல்லாமல் தொடர முடியும் என்று திவாகரன் சற்று அழுத்தமாகவே சசிகலாவிடம் கூறி உள்ளார்.
இதையடுத்து, கட்சியின் சின்னத்தை காப்பாற்ற அணிகளை இணைத்தே தீர வேண்டும். ஆட்சி நிலைக்க தினகரனை ஓரம் காட்டியே தீர வேண்டும் என்ற திவாகரன் யோசனையை சசிகலா ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதை தொடர்ந்து, தம்மை சந்தித்த தினகரனிடம் கொஞ்சநாள் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்குமாறும் சசிகலா கூறி இருக்கிறார்.
ஆனால், திடீரென துணை பொது செயலாளர் பதவியை கொடுத்து, கொடுத்த சில மாதங்களிலேயே அதை பிடுங்கினால் என்னை யார் மதிப்பார்கள். நானும் கட்சியை விட்டு ஒதுங்கி இருந்தால், நம் குடும்பத்தின் பிடி முற்றிலும் இல்லாமல் போய்விடுமே என்றும் சசிகலாவிடம் அவர் வாதாடி இருக்கிறார்.
ஆனாலும், நான்காண்டுகால ஆட்சியே முக்கியம் என்று நினைக்கும் சசிகலா, விரைவில் தினகரனை ஓரம் கட்டி விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், திவாகரனை போல, திரை மறைவில் இருந்து ஆட்சி நடத்துவதுதான், தமது குடும்பத்திற்கு பாதுகாப்பு என்று சசிகலா நினைப்பதாக மன்னார்குடிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.