
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதற்காக அமைச்சர்களும், மூத்த நீர்வாகிகள் அடங்கிய குழு விரைவில் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இரு அணிகளும் இணைவதற்கான முக்கிய காரணம், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதே முக்கியமாக உள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக தேவைப்படுகிறது.
இதற்கிடையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைவரும் நாளை சென்னை வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், அனைத்து மாவட்ட செயலாளர்களும், அமைச்சர் செங்கோட்டையனிடம் பிரமாண பத்திரத்தை தயார் செய்து தரவேண்டும். அதில், கட்சியின் சின்னத்தை மீட்பதற்கான அனைத்து கருத்துக்களும் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இன்று மாலை இரு அணிகளும் சேருவதற்கான பேச்சு வார்த்தை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் நடக்க உள்ள நிலையில், மீண்டும் சின்னத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்த இருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.