இழிவாக பேசி மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல்... திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

By vinoth kumarFirst Published May 19, 2020, 4:05 PM IST
Highlights

மாவட்ட ஆட்சியரை மிரட்டியது தொடர்பாக அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 5 பிரிவுகளின் கீழ் தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரை மிரட்டியது தொடர்பாக அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 5 பிரிவுகளின் கீழ் தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி, தி.மு.க.வின் ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் உதவி கேட்டு பெறப்பட்ட மனுக்களை, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி சென்று ஆட்சியர் அன்பழகனை சந்தித்து வழங்கினார். பின்னர் வெளியே வந்த அவர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக்கூட்டங்களுக்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வான தன்னையோ, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோரை அழைப்பதில்லை.

ஆனால், கிரு‌‌ஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்பது குறித்து ஆட்சியரிடம் கேட்டதற்கு அலுவலகத்தில் நடக்கும் கூட்டம் குறித்து தனக்கு தெரியாது என்றார்.  உங்களுக்கு தகவல் தெரிந்தால் நீங்களும் கலந்து கொள்ளுங்கள், என்று கூறுகிறார். ஆட்சியர் பக்குவம் இல்லாமல் பேசுகிறார். இனி கூட்டங்களுக்கு என்னை அழைக்காவிட்டால், ஆட்சியர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இந்நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் தாந்தோணிமலை போலீசார், 5 பேருக்கு மேல் கூட்டமாக வந்தது, ஊரடங்கை மீறியது, தகாத வார்த்தைகளால் திட்டியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது என 5 பிரிவுகளின் கீழ் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!