இந்தியா சந்திக்க உள்ள மற்றொரு கொடூரம்..!! 13 கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்..!!

By Ezhilarasan BabuFirst Published May 19, 2020, 3:49 PM IST
Highlights

இந்தியாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 13 கோடியே 50 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே பணமதிப்பு நீக்கம் , ஜிஎஸ்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது கொரோனாவால் ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து விட்டது  எனவும் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என ஆர்த்தர் டி லிட்டில் என்ற சர்வதேச மேலாண்மை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது .  இந்த வைரசால் இந்தியா மிகக் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது .  இந்தியாவில் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது .  இதுவரை 3 ஆயிரத்து 164 பேர் உயிரிழந்துள்ளனர் . இன்னும் சில நாட்களில் வைரஸ் பட்டியலில்  முதல் ஐந்து  நாடுகள் வரிசையில்  இந்தியா இடம் பிடிக்குமென கணிக்கப்பட்டுள்ளது .  சீனாவுக்கு அடுத்து உலகிலேயே அதிக மக்கள் தொகை  கொண்ட நாடான இந்தியா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வரும் நிலையில் , 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைவுதான் என பல உலக  நாடுகள் கூறி வருகின்றன.  இது ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தாலும்  தொடர் ஊரடங்கு  நாட்டின் ஒட்டு மொத்த  பொருளாதாரத்தையும்  மொத்தமாகச்  சரித்துள்ளது .   இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சர்வதேச மேலாண்மை ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான ஆர்தர் டி லிட்டில் என்ற  ஆய்வு நிறுவனம் ,   இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது .  ரூபாய் மதிப்பு தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது , நாட்டில் வேலையின்மை மூன்று மடங்கு அதிகரித்துவிட்டது ,  கோடிக்கணக்கான மக்கள் அன்றாட உணவுக்கே திண்டாட வேண்டிய நிலைமை நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது .  ஏற்கனவே வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருந்த இந்திய பொருளாதாரம் கொரோனா தாக்கத்தின் காரணமாக மேலும்  அதிகரித்துள்ளது .  இந்தியாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 13 கோடியே 50 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. 

அதுமட்டுமின்றி இந்தியாவில் சுமார் 12 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப் படுவார்கள்   என்றும் எச்சரித்துள்ள இந்த ஆய்வு நிறுவனம் இந்தமாற்றத்தின் காரணமாக இந்திய மக்களின் நுகர்வு பொருட்கள் மற்றும் நுகர்வின் அளவு குறையும் ,  எதிர்காலத்திற்கு உத்தரவாதமற்ற வாழ்க்கைக்கு மக்கள் தள்ளப்படுவர்,  மக்கள் முடிந்த அளவு செலவுகளை குறைத்து கையில் இருக்கும் சிறிய அளவிலான பணத்தை சேமிப்பின் பக்கம் திருப்பவே அதிக அளவில் முயற்சி செய்வார்கள் என்றும் ஏற்படப்போகும் ஆபத்து குறித்து ஒவ்வொன்றாக அடுக்குகிறது இந்த நிறுவனம் .  மேலும் நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் குறைந்து நாட்டின் ஜிடிபி மற்றும் அதன் வளர்ச்சி அதிக அளவில் பாதிக்கப்படும் 2020-21 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 10.8 சதவீதம்  அளவிற்கு சரியும் எனவும் ஆர்த்தர் டி லிட்டில் குறிப்பிட்டுள்ளது . 

 

click me!